நீலகிரி மாவட்டத்தில் டிச.3-ம் தேதி வரை மொத்தம் 2,814 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.8.90 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் 07.05.2021 அன்று முதல்வராக பொறுப்பேற்றவுடன், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மாற்றுத்திறனாளிகள் மீது மிகவும் அக்கறை கொண்ட காரணத்தினால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வராக பொறுப்பேற்றவுடன் மாற்றுத்திறனாளிகள் நகர பேருந்துகளில் பயணிக்கும் போது உடன் உதவியாளருடன் இலவசமாக பயணம் செய்யலாம் என்று ஆணை பிறப்பித்தார்.
மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மறுவாழ்வினை கருத்திற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு கல்வி திட்டம், மாற்றுத்திறனாளி மாணவ / மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, சுய வேலை வாய்ப்பு வங்கி கடன் மானியம், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், திருமண உதவித்தொகை, பார்வையற்றோருக்கு பஸ் பாஸ் மாவட்டம் முழுவதும், சட்டபடிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி, தெருவில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் மனநல மறுவாழ்வு இல்லம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை, பேறுகால உதவித்தொகை, ஈமச்சடங்கு / இயற்கை மரணம் உதவி தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவிதொகை என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் 07.05.2021 முதல் 03.12.2022 வரை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1598 பயனாளிகளுக்கு ரூ.5.41 கோடி மதிப்பிலும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 849 பயனாளிகளுக்கு ரூ.2.86 கோடி மதிப்பிலும், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ.12.35 லட்சம் மதிப்பிலும், கூடுதல் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 81 பயனாளிகளுக்கு ரூ.5.74 லட்சம் மதிப்பிலும், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.68,000/- மதிப்பிலும், சுய தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலும், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 122 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலும், மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி 5 பயனாளிகளுக்கு ரூ.4.99 லட்சம் மதிப்பிலும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ.22.89 லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 49 பயனாளிகளுக்கு ரூ.3.35 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 2,814 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.8.90 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
“பேரானந்தமும் மகிழ்ச்சியும்”
பயனடைந்த மாற்றுத்திறனாளி பயனாளி இலங்கேஷ்வரன் கூறியதாவது:
உட்லேண்ட், முசாபுரி, குன்னூர் பகுதியில் வசித்து வருகிறேன். கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. தனியார் துறையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகிறேன். தினமும் வேலைக்கு செல்ல பிறர் வாகனத்தை பயன்படுத்தி வந்தேன்.
இந்நிலையில் பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த 03.12.2022 அன்று உதகை ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில், நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், பெட்ரோல் ஸ்கூட்டர் கிடைத்தது. எனக்கு பேரானந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர் உதவியுடன் வேலைக்கு சென்று அன்றாட பணிகளை செய்து வருகிறேன்.
மாற்றுத்திறானாளிகளின் வாழ்வில் தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்வருக்கு எனது சார்பாகவும், குடும்பத்தின் சார்பாகவும்; நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
“சுயமாக செயல்பட முடிகிறது”
பயனடைந்த மாற்றுத்திறனாளி பயனாளி பிரிடா ஜாஸ்மின் கூறியதாவது:
கணவர் வசந்த குமார் உடன் உதகை தாவணெ இந்திரா நகரில் வசித்து வருகிறோம். எனக்கு இரு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. பிறர் உதவியுடன் அன்றாட வேலைகளை செய்து வந்தேன்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைதீர் முகாம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இம்மையத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்தேன். முன்னுரிமை அடிப்படையில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இப்போது தனியாக வெளியில் சென்று என்னுடைய வேலைகளை சுயமாக செய்ய முடிகிறது. மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த முதல்வருக்கு குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் இது போன்ற பல திட்டங்களை நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கிய முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.
தொகுப்பு:
நி.சையத்முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நீலகிரி மாவட்டம்.



