கடந்த மாதம் 22ஆம் தேதி கல்லாறு – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இதன் காரணமாக 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே உள்ள ரயில் பாதையில் பல இடங்களில் பாறைகள் மற்றும் மண் சரிந்து தண்டவாளம் சேதம் அடைந்தது. ரயில் பாதையின் குறுக்கே மரங்களும் விழுந்தன.
நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரயில் சேவை நேற்று வரை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் ரயில் சேவை துவங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக உதகை மலை ரயில் சேவை நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே சேலம் கோட்டம் காலை அறிவித்தது.
இந்த நிலையில் தொடர்ந்து மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதும் திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.



