நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 தேர்தல் செலவுகள் தொடர்பாக தேர்தல் செலவின பார்வையாளர்கள் சந்தீப் மிஸ்ரா (107-பவானிசாகர், 111-மேட்டுப்பாளையம், 112-அவினாசி (தனி) மற்றும் கிரண் (108-உதகமண்டலம், 109-கூடலூர் (தனி), 110-குன்னூர் (தனி) ஆகியோர் தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா முன்னிலை வகித்தார். இதில் தேர்தல் செலவின பார்வையாளர் சந்தீப் மிஸ்ரா கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து தேர்தல் தொடர்பான செலவுகளும் கண்காணிக்கப்படும்.
அனைத்து செலவுகளையும் முறையாக தேர்தல் செலவின கணக்கீட்டு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு ஒளிவுமறைவின்றி தாங்கள் மேற்கொள்ளும் செலவுகளை மேற்கண்ட குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்.
இக்கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் டி.கிரண் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் தொடர்ந்து 24×7 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இனி வருங்காலங்களில் இந்த கண்காணிப்பு பணி இன்னும் தீவிரமாக மேற்கொள்ளப்படும். எனவே, எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகள் பதிவேட்டில் முறையாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மேலும், தேர்தல் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக எங்களை தொடர்புக் கொண்டு, தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) தகண்ணன், வேட்பாளர்களின் முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



