‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ உறுதிமொழியினை காணொலி காட்சி வாயிலாக சென்னையில் இருந்து முதல்வர் வாசிக்க, நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் பேசியதாவது:
இன்றைய காலத்தில் உள்ள மாணவர்கள் தேவைப்படும்போது கைப்பேசியை பயன்படுத்த வேண் டும். நீண்ட நேரம் கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
போதை பழக்கத்திற்கு அடிமையான பிறகு அவர்களை மீட்பதைக் காட்டிலும், இதுபோன்ற பழக்கத்திற்கு ஆளாகாமல் தங்களை தற்காத்து கொள்வது ஒரு சிறந்த முறையாக இருக்கும். போதைப் பொருட்கள் பயன்படுத்தினால், பயன்படுத்துபவர்களுக்கும் தீமைகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், அவர்களது பெற்றோர்களும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இளைஞர்கள் இப்பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் அதிக கவனம் செலுத்தி நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
பள்ளி கல்லூரி, மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பண்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த விழிப் புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார் ஆட்சியர்.
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசிய ஸ்ரீசாந்தி விஜய் பெண்கள் மேல் நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி அய்ஷா சனோபர், பிரிக்ஸ் பள்ளி மித்ரா ஆகியோரை பாராட்டி பொன்னாடை அணிவித்தார் ஆட்சியர்.
முன்னதாக, உதகை ரயில் நிலையத்தில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் ஆட்சியர். லோயர் பஜார் வழியாக பண்பாட்டு மையத்தை பேரணி சென்றடைந்தது.
மாவட்ட காவல்கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர், மாவட்ட ஊராட்சித் தலைவர் மு.பொன்தோஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, உதவி ஆணையர் (கலால்) சதீஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, உதகை நகர்மன்றத் தலைவர் வாணீஸ்வரி, உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன், உதகை வட்டாட்சியர் சரவணக்குமார், பொது மருத்துவத்துறை இணைப் பேராசிரியர் மரு.பாலாஜி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.



