மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வில், தேசிய அளவில் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ஆய்வு நடத்தியுள்ளது.
38 மாணவர்களின் பள்ளி, கல்வி வாரியம், ‘நீட்’ தேர்வுக்காக பெற்ற பயிற்சி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த 38 மாணவர்களில் 29 பேர் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர் கள்; 5 பேர் ஆந்திர மாநில பாடத் திட்டத்திலும், 3 பேர் மராட்டிய மாநிலப் பாடத் திட்டத்திலும், 2 பேர் மேற்குவங்க மாநிலப் பாடத் திட்டத்திலும் படித்தவர்கள்.
அதேபோல், விவரங்கள் சேகரிக்கப்பட்ட 38 பேரில், 29 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்த உயர்ஜாதி மாணவர்கள். 7 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், இருவர் பட்டியலினத்தையும் சேர்ந்தவர்கள்.
சாதனை படைத்த மாணவர்கள் 38 பேரில் 37 பேர் ‘நீட்’ தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்புப் பயிற்சி பெறாதவர். ஆனால், அந்த மாணவர் டெல்லியின் புகழ்பெற்ற பொதுப்பள்ளியில் படித்தவர்.
அனைவருமே நகரப் பகுதிகளைச் சேர்ந்த, பொருளாதார அடிப்படையில் வலிமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள் என அந்த ஆய்வு பகீர் தகவல்களை அம்பலப்படுத்தி இருக்கிறது.
இதிலிருந்தே, ‘நீட்’ தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சேர்ந்த, தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து படிக்கும் அளவுக்கு வசதி படைத்த குடும்பங்களின் மாணவர் களுக்கு மட்டுமே வாய்ப்பானது என்பது உறுதியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் படித்தவர்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு என்பது மிகவும் கடினமானதாக இருப்பதும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகி விட்டது என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘நீட்’ டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குக் கோரும் சட்ட முன்வடிவு ஆளுநர் மாளிகையில் குறட்டை விட்டது போதாது என்று, இப்பொழுது குடியரசுத் தலைவர் மாளிகையில் உறங்குகிறது.
இது அரசியல் பிரச்சினையல்ல, ஏழை& எளிய மாணவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட சமூக பிரச்னை. நீட் தேர்வுக்கு எதிரான மத்திய அரசின் மாயாஜால பிரசாரத்தை வேரறுக்க வேண்டிய காலக்கட்டம் இது என்பதையே இந்த ஆய்வு தெளிவாக்கி இருக்கிறது.
இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ஒழித்துக்கட்டுவோம் என சூளுரைத்து செயல்பட்டு வருகிறார்.
சமூகநீதிக்காகக் குரல் கொடுத்து வரும் பிற அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் ஒட்டுமொத்த பொதுமக்களும் வலுவாக ஒன்றிணைந்து பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நேரம் இது.
குறைந்தபட்சம் வெள்ளோட்டமாக இந்தியா முழுவதற்குமாக ஓங்கிக் குரல் கொடுக்கும் தமிழ்நாட்டுக்காவது முதலில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.
இதனை மத்திய அரசு செவி மடுக்காது என்பது தெரிந்த விஷயமாக இருந்தாலும் ஜனநாயக நாட்டில் உரிமையைப் போராடித் தானே பெற வேண்டியிருக்கிறது?
ஆக, ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவு மண்மூடிப் போய்விடாமல் காக்க ‘நீட்’ தேர்வுக்கு சாவுமணி அடிக்க வேண்டும்.
ஆங்கில நாளிதழ் ஆய்வு சொல்லும் கசப்பான… உண்மையான செய்தியும் அது தான்!