உலகளவில் போட்டியிடுதல் மற்றும் இந்திய உணவு மற்றும் ஊட்டச் சத்துப் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட தொலைநோக்கு அம்சங்களைச் செயல்படுத்த இந்தியப் பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் சங்கம் (ஐபிஜிஏ) திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கம் வரும் 16முதல் 18 வரை 3 நாள்கள் மும்பையில் நடைபெறும்.
விளம்பர முகமைகள், ஆய்வு விஞ்ஞானிகள், உணவு தொழில்நுட்ப நிபுணர்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள், மதிப்புச் சங்கிலித் தொடர் பங்கேற்பாளர்கள், சேவை வழங்குவோர் மற்றும் தொடர்புள்ள அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பங்கேற்க உள்ளனர்.
தற்போதைய நிலை, எதிர்காலப் போக்கு, வர்த்தக் கொள்கைகள், நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட துறை சார்ந்த முக்கிய அம்சங்களை ஒரே தளத்தில் கூடி விவாதிக்க உள்ளனர்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் பன்னாட்டுக் கருத்தரங்கு, சமீபத்திய பொருள்கள், பதப்படுத்துதல், கருவிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதுடன், 20க்கும் அதிகமான நாடுகளிலிருந்து நூற்றுக் கணக்கான பிரதிநிதிகளையும் ஒருங்கிணைந்து அறிவுசார் பகிர்வு மற்றும் வலையமைவு வாய்ப்பை ஏற்படுத்தும்.
இந்தியா, பருப்பு வகைகளின் சாகுபடிக்காக உலகின் மிகப் பெரிய நிலப் பரப்பளவைக் கொண்டிருப்பதுடன், உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளராகவும், பதப்படுத்துனராகவும், நுகர்வோராகவும் விளங்குகிறது.
கனடா சஸ்காட்சுவான் மாகாண விவசாய அமைச்சர் டேவிட் மேரிட், இரு நாடுகளுக்கு இடையே பருப்பு மற்றும் தானியங்கள் வணிகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், 2023 பருப்பு வகைகள் பன்னாட்டுக் கருத்தரங்கில் தனது குழுவினருடன் பங்கேற்பார்.
ஐபிஜிஏ அவைத் தலைவர் பிமல் கோத்தாரி கூறுகையில், பருப்பு வகையிலுள்ள மதிப்புக் கூட்டுப் பொருள்கள் அபரிமித வளர்ச்சி பெறும் ஆற்றலுள்ளவை என்பதால் இந்தியாவில் நன்கு பயன்படுத்திக் கொண்டால், அவை விவசாயிகளின் வருமானப் பெருக்கம், ஊட்டச் சத்து பாதுகாப்பு மேம்பாடு ஆகிய இரு பலன்களை வழங்குமென நம்புகிறோம் என்றார்.
இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருக்கும் முக்கியத் தலைப்பு பருப்பு வகைகளிலிருந்து தயாராகும் தாவர அடிப்படையிலான உணவுப் பொருள்களாகும்.ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் 6-வது எடிஷன் பருப்பு வகைகள் பன்னாட்டுக் கருத்தரங்கு 2023இன் மையநோக்கம் “பருப்பு வகைகள் துறையின் நிலைத்தன்மை” குறித்ததாகும்.