பிரதமர் மோடி சமீபகாலமாக எங்கு உரையாற்றினாலும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது, திருக்குறள், பாரதியார் கவிதைகள் உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்து குறிப்பெடுத்து சுட்டிக்காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவர், தமிழை உச்சந்தலையில் வைத்து கொண்டாடினார். அது பின்னர் தொடர்ந்தது. வடமாநிலங்களில் பேசும்போது கூட தமிழைக் கொஞ்சுகிறார். உலகின் மூத்த மொழி தமிழென்று உச்சிமுகர்கிறார்.
பிரதமர் மோடிக்கு தமிழ் மீது தீராக்காதல் ஏற்பட்டு விட்டதாகவே பாஜகவினர் பீற்றிக் கொண்டனர். அப்படிச் செய்தி வரும்போதெல்லாம் இதனை உண்மை என நம்பி தமிழர்கள் அனைவருமே பெருமைப்பட்டோம்.
ஆனால் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்த்திட அல்லது திணித்திட ஒன்றிய பாஜக அரசு செலுத்தும் அக்கறையில் 20 ல் ஒரு பங்கைக்கூட தமிழ் வளர்ச்சயின் மீது செலுத்தவில்லை என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைச் சமமாக அணுக வேண்டிய ஒன்றிய அரசு தமிழ் உள்பட பல மொழிகளை புறக்கணித்து வருகிறது என தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் சாட்டிய குற்றங்கள் உண்மையாகி இருக்கிறது.
புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு அதிக அளவு நிதியும், உலகத்தின் பழமையான மொழியான தமிழுக்கு குறைவான அளவு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் சமீபத்தில் தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார் மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்.
அதன்படி, 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ரூ.74.1 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதே சமயம் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு ரூ.1487.9 கோடியை ஒதுக்கியுள்ளது. அதாவது, தமிழை விட சமஸ்கிருதத்திற்கு சுமார் 20 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மூத்த மொழியான தமிழைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டே அதன் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வஞ்சனை செய்வது நியாயமா? ஏன் இந்த பாகுபாடு? அடுத்து வரும் கூட்டங்களில் தமிழை பிரதமர் மோடி கையாளும் போது இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டும். அதோடு உடனடியாக சமஸ்கிருதத்தை விட கூடுதலாக தமிழுக்கு நிதி ஒதுக்கி பரிகாரம் தேட வேண்டும்.
அப்போது தான் தமிழ் மீது பிரதமர் மோடி வைத்திருப்பது உண்மையான பாசமா? வேஷமா? என்பது வெளிப்படும். இல்லையெனில் புதிய கல்வி கொள்கையை உருவாக்கி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்த பார்க்கிறார்கள்.
தமிழையும், திருக்குறளையும் பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையாகி விடும். எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் அண்ணாமலையாவது இதற்கானப் பதிலைப் பெற்றுத் தமிழர்களுக்கு விளக்கம் தர வேண்டும்.
தமிழன்னைக்கு மகுடம் சூட்டுவாரா பிரதமர் மோடி?



