fbpx
Homeபிற செய்திகள்பிரதமர் மோடி உரையும் காங்கிரஸ் விமர்சனமும்!

பிரதமர் மோடி உரையும் காங்கிரஸ் விமர்சனமும்!

பல வண்ண ராஜஸ்தானி கலாச்சார ஆடையை அணிந்து, 77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தொடர்ந்து 10வது முறையாக கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் உறுதியுடனும் முன்னேறி வருகிறது.

மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய மூன்றும் நாட்டின் அனைத்து கனவுகளையும் நிறைவேற்றும் திறன் கொண்டவை” என்று கூறினார். இளைஞர்களால் மட்டுமே நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகும் என்றும், இளைஞர்கள் மூலம் இந்தியா உலக சாம்பியனாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

வரவிருக்கும் ஐந்தாண்டுகள் முன்எப்போதும் இல்லாத வளர்ச்சி மற்றும் 2047-க்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக வேண்டும் என்ற கனவை நனவாக்கும் பொன்னான தருணமாக இருக்கும். அடுத்த வருடம், ஆகஸ்ட் 15-ம் தேதி இதே செங்கோட்டையில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி சாதனைகளை பட்டியலிடுவேன்” என பிரதமர் மோடி முழங்கி உள்ளார்.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு பிரதமர் பதவி அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இது அவரது 10-வது சுதந்திர தின உரையாகும். அடுத்த முறையும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே செங்கோட்டையில் கொடியேற்ற முடியும்.

2024 தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராகி கொடியேற்றுவேன் என்பதையே பிரதமர் சூசகமாக தெரிவித்துள்ளார். பிரதமரின் உரையை பாஜக ஒன்றிய அமைச்சர்களும் தலைவர்களும் உச்சி முகர்ந்து வரவேற்ற போதிலும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

பிரதமர் மோடி அடுத்த வருடம் அவரது வீட்டில் தான் தேசியக் கொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே சாடி உள்ளார். பொய், வெற்று வாக்குறுதிகள் நிறைந்த பிரதமர் மோடியின் உரை என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இந்திய மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை தடுக்க எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதேவேளையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க தேசிய ஜனநாயக கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.

பிரதமரின் சுதந்திரதின விழா உரை, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை பாஜக தொடங்கி விட்டது போல அமைந்து விட்டது. எதிர்க்கட்சிகளையும் உசுப்பி விட்டுள்ளது.

வெற்றிப் பயணத்தை இரு அணிகளும் தொடங்கி வெகு நாட்களாகி விட்டது. ஆனால் யாருக்கு வெற்றி மகுடத்தைத் தரப்போகிறார்களோ, வாக்காளப் பெருமக்கள்?

படிக்க வேண்டும்

spot_img