கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை துவங்கியுள்ளது. நவராத்திரி விழா அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் 19 வரை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் இல்லங்களில் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு கொண்டாடுவர்.
இந்நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை துவங்கியுள்ளது. இதனை அமைச்சர் சம்பத்குமார் துவக்கி வைத்தார்.
இங்கு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8மணி வரை இந்த விற்பனை நடைபெறும். மேலும் நவராத்திரி கொலு பொம்மைகளில் 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இதில் இந்திய மக்களின் பண்பாடு சமூக வாழ்க்கை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல்வேறு வகையான கொலு பொம்மைகள், புராணக் கதை கொலு பொம்மைகள், தசாவதாரத் தொகுப்பு, தர்பார் தொகுப்புகள், மும்மூர்த்திகள், திருத்தலங்கள், தலையாட்டி பொம்மை, சுடுமண் பொம்மைகள், உட்பட பல்வேறு வகையான பொம்மைகள் கடவுள் சிலைகள் ஆகியவை கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ராமாயணக் கதை, ஆண்டாள் தாயம், தென் திருப்பதி தாயார் பெருமாள் செட் ஆகியவை புதுவரவாக வரப்பட்டுள்ளது. 20 ரூபாய் முதல் 85,000 ரூபாய் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.



