தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னேறிய தொழில் வாய்ப்புள்ள மாநிலமாக இருப்பதால் ஏராளமான வடமாநிலத்தவர் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர் முக்கிய பண்டிகைகளுக்கு தங்கள் மாநிலத்துக்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
அப்படி தங்கள் மாநிலத்துக்கு செல்ல பெரும்பாலும் அவர்கள் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். அதில் சிலர் கும்பலாக முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏறி பயணம் செய்யும் நிகழ்வு அடிக்கடி நடந்து வருகிறது.
இதன் காரணமாக ரயிலில் முன்பதிவு செய்திருப்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதிலும் கடந்த சில மாதங்களாக முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யும் வடமாநிலத்தவரால் முன்பதிவு செய்தவர்கள் பாதிக்கப்பட்டு அவர்கள் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிப்பதும், இதனால் வடமாநிலத்தவர்கள் நடுவழியில் இறக்கிவிடப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக ஹவுராவுக்கு செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் வடமாநில கும்பல் பயணம் செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வழக்கம்போல நேற்று முன்தினம் வந்துள்ளது.
அப்போது முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் ஏறியதோடு அல்லாமல் முன்பதிவு இருக்கையில் அமர்ந்து முன்பதிவு செய்தவர்களுக்கு கடும் சிரமத்தை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முன்பதிவு செய்த பயணிகள் வடமாநிலத்தவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த தருணத்தில் ரயில் புறப்பட்ட நிலையில், பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். அதன்பின் அங்கு ரயில்வே காவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதககர்கள் வந்தநிலையில், அவர்களிடம் முன்பதிவு செய்த பயணிகள் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.
பின்னர் முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டியில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இதனால் சுமார் ஒருமணி நேரம் ரயில் தாமதமாக திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
ரயிலின் முன்பதிவு பெட்டிகளில் இதுபோல முன்பதிவு செய்யாதவர்கள் ஏறி செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தப்படுவதாக கிளம்பிய வதந்தியால் பீகார் மாநில அரசின் குழுவினர் இங்கு வந்து விசாரிக்கும் அளவிற்கு நிலைமை மோசமானது.
வடமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுமில்லை என்பது உறுதியானதால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ரயில்களில் வடமாநிலத்தவர்கள் டிக்கெட் எடுக்காமல் அல்லது முன்பதிவில்லா பெட்டியில் பயணிக்க டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டியில் கும்பலாக ஏறுவது அதிகரித்து இருப்பது கவலை தருகிறது.
இந்த விதிமீறலை ரயில்வே ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ரயில்வே நிர்வாகமும் போலீசாரும் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ரயில் பயணம் பாதுகாப்பற்றது என மக்கள் நினைத்துவிடுவார்கள்.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பு. இதுபோன்ற சின்னச்சின்ன பிரச்னைகள் கூட மோதல் போக்கை உருவாக்கி விடக்கூடாதல்லவா? எச்சரிக்கை-!