மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை, மான், சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அவ்வப்போது சாலையை கடந்து ஊருக் குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வது உண்டு.
அந்த வகையில் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலை, மேட்டுப்பாளையம் -& கோத்தகிரி சாலைகளில் வனவிலங்குகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் 2 குட்டிகளுடன் கூடிய 5 காட்டு யானைகள் பரபரப்பான சாலையை கடந்து ஒருபுறம் இருந்து மறுபுறம் இருக்கும் வனப் பகுதிக்குள் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
எனினும் வனத்துறையினர் பாதுகாப்பாக சாலையை கடக்கும் வகையில் சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தி யானைகளுக்கு வழி ஏற் படுத்திக்கொடுத்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மற்றும் கோத்தகிரி செல்லும் வாகனங்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும் போது பாதுகாப்பாகவும்,அதே நேரத்தில் கவனத்துடனும் பயணிக்க வேண்டும்.
வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது. அதற்கு உணவு பண்டங்களை கொடுக்கக் கூடாது. வன விலங்குகளை துரத்தவோ, விரட்ட முயற்சிக்கவோ கூடாது.
வனவிலங்குகள் சாலையின் ஓரம் நிற்பதை கண்டால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.