மேட்டுப்பாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் கமிஷனர் அமுதா முன்னிலையில் நேற்று நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வரும் மூன்று குடிநீர் திட்டங்களில் பராமரிப்பு பணியில் மூன்று நிரந்தர ஊழியர்களும்,நான்கு ஒப்பந்த ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.ஆனால்,30 பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 7 பணியாளர்களே உள்ளனர்.
போதுமான பணியாளர்கள் இல்லாததால் மின் மோட்டார்களை இயக்கி பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து குடிநீர் வழங்கும் பணிகளை முழுமையாக செய்ய இயலவில்லை.இதனால் பல இடங்களில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டு வருகிறது.
எனவே,பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதற்காக சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு மற்றும் இயக்குதல் பணிகளுக்காக ஒப்பந்த நிறுவனம் மூலமாக ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இதனால் குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்ய முடியும்.
இதேபோல் மேட்டுப்பாளையம் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகளை அங்கீகரித்து நடந்து முடிந்த நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த மேட்டுப்பாளையம் பகுதி வாக்காளர்களுக்கு நகர மன்றத்தின் சார்பாக நன்றியையும்,எம்பி ஆ.ராசாவிற்கு வாழ்த்துக்களையும் நகர மன்றம் தெரிவித்துக்கொள்கிறது.
மேலும்,மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வள்ளுவர் துவக்க பள்ளியில் போதுமான இட வசதி இல்லாததால் அதன் அருகில் காலியாக இருக்கும் பழைய நீதிபதி குடியிருப்பை நகராட்சிக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 48 தீர்மானங்கள் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ராமசாமி,சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகரமைப்பு அலுவலர் ஜெயவேல் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள்,துணை தலைவர் அருள்வடிவு முனுசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.