fbpx
Homeபிற செய்திகள்அமெரிக்க - இந்தியா உறவு டிரம்ப் ஆட்சியில் ஓங்கட்டும்!

அமெரிக்க – இந்தியா உறவு டிரம்ப் ஆட்சியில் ஓங்கட்டும்!

டொனால்ட் டிரம்ப், 2வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ளார். டிரம்ப் அதிபராவதன் மூலம் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க பலன்கள் இருக்கின்றன. இந்தியர்களுக்கு விசா வழங்குவது உள்ளிட்டவைகளை தாண்டி, சீனா விஷயத்தில் நிச்சயம் இந்தியாவுக்கு ஆதரவளிப்பது, தேசிய பாதுகாப்பு நெருக்கடிகளின் சமயங்களில் உதவுவது என டிரம்ப் அதிபராவதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் சில குறிப்பிட்ட பலன்கள் கிடைக்க இருக்கின்றன.

இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி சார்ந்திருக்கும் பாஜக, வலதுசாரி பழமைவாத கட்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் டிரம்ப் சார்ந்திருக்கும் கட்சியும் பழமைவாத கட்சியாக இருக்கிறது. எனவே இரு அரசுகளுக்கும் இயல்பிலேயே சில ஒற்றுமைகள் இருக்கும். இது இந்திய நலன்களில் பிரதிபலிக்கும்.

குறிப்பாக அமெரிக்காவை பொறுத்தவரை இந்தோ- பசிபிக் பிராந்தியம் மிக முக்கியமானது. இங்கு வர்த்தகம் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா கோலோச்ச வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால், சீனா தான் பெரிய தலைவலியாக & தடையாக இருக்கிறது.

அமெரிக்காவிற்கு இணையாக சீனா அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. எனவே சீனாவை சமாளிக்க இந்தியா பக்கம் அமெரிக்கா நிற்கிறது. டோக்லாம், பாலகோட் மற்றும் கால்வான் ஆகிய மூன்று முக்கியமான சம்பவங்களின்போது இந்தியா பக்கம்தான் அமெரிக்கா நின்றிருந்தது. இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்திருந்தது.

சீனாவை சமாளிக்கவும், அதன் அதிகாரத்திற்கு சவாலை ஏற்படுத்தவும் இன்னொரு நாடு தேவை, அதற்காகவும் அமெரிக்கா இந்தியாவுடன் மிகவும் நெருங்கி வருகிறது. எது எப்படி இருந்தாலும் இது இந்தியாவுக்குதான் சாதகம். பலதுறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு இது உதவுகிறது.

அதேபோல குவாட் அமைப்பில் இந்தியாவின் நீண்ட கால கோரிக்கைகள் டிரம்பின் 2வது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் சீனாவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து இந்தியா வர்த்தகத்திலும் பாதுகாப்பு அம்சங்களிலும் பெருவளர்ச்சி காணமுடியும்.

அதேபோல மற்றொரு சாதகமான விஷயம், டிரம்பின் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்திய ஆதரவாளர்கள். அவர்கள் தீர்க்கமான இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவுக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.

டிரம்ப் ஆட்சியில் விசா உள்ளிட்ட விஷயங்களிலும் தங்கள் உரிமைகள் எதுவும் பாதிக்கப்படாது என்றே அமெரிக்கவாழ் இந்தியர்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

ஏனென்றால் அமெரிக்காவின் வளர்ச்சியில் புறந்தள்ள முடியாத அளவிற்கு அங்குள்ள இந்தியர்களின் திறன் உள்ளது. அதாவது அமெரிக்க – இந்தியா நல்லுறவு தவிர்க்க முடியாதது. நற்பலன்களே கிட்டும் என இந்திய அரசும் முழுமையாக நம்புகிறது.

ஆக, டிரம்ப் 2வது முறையாக அதிபராக பதவியேற்பதன் மூலம் இந்தியாவுக்கு பெருமளவில் நன்மைகளே விளையும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்களும் கூறியுள்ளனர். அதன்படி, டிரம்பும் நரேந்திர மோடியும் கைகோர்த்து பயணிக்கப் போகிறார்கள். காலங்காலமாக இருந்து வரும் இருநாட்டு நல்லுறவு ஓங்கி வளரப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

புதிய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img