மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், குருத்தூர் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல்துறை சார்பாக விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய வேளாண் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா செய்தி யாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ஆட்சியர் தெரிவித்ததாவது:
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருட்கள் உற்பத்தியினை பெருக்கிட விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் அளிப்பது, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உயர் தொழில் நுட்பங்களை விவ சாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற இன்றியமையாத பணிகளை தனது குறிக்கோளாக கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பணிகளுக்காக அரசு மானியத்துடன் கூடிய நவீன வேளாண் இயந்திரங்கள் வழங்கப் பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 13 வட்டாரங்களில் உள்ள விவ சாயிகளுக்கு ரூ.186.56 லட்சம் மதிப்பீட்டில் 88 பவர் டில்லர்கள் ரூ.74.80 லட்சம் மதிப்பு அரசு மானியத்தில் 88 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
டிராக்டர், ரோட்டோவேட்டர், கல்டிவேட்டர், பவர் வீடர் மற்றும் பவர் ஸ்பிரேயர் போன்ற இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சிறுகுறு, தாழ்த்தப்பட்ட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சத விகித மானியத்திலும், இதர விவசா யிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளன.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பெற்ற விவ சாயிகள் இயந்திரங்களின் முழுத் தொகையினை தாங்கள் தேர்ந் தெடுக்கப்ட்ட நிறுவனத்திற்கு வங்கி வரைவோலையாக செலுத்தி இயந்திரங்ளை பெற்ற பின்பு, பொறியாளர்கள் ஆய்வு செய்த பின்னர் விவசாயிகளின் வங்கிக் கணக் கில் பின்னேற்பாணையாக மானியத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கடப்பாறை, இரும்புச் சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, கதிர் அறுவாள் ஆகிய வேளாண் உபகரண தொகுப்புபள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ரூ.49.5 லட்சம் மதிப்பீட்டில் 3,383 வேளாண் குடும்பங்களுக்கு வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார்.