கோவையில் நாளை (9ம் தேதி) தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பெருக்குவதிலும் குறிப்பாக இளைஞர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகளை உயர்த்துவதிலும் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார்.
அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 இலட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்றுள்ளனர். அதே போல, பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண் ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வாயிலாக ஆண்டு தோறும் சராசரியாக 7,72,000 மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கிறார்கள்.
இவர்களில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண் ணிக்கை இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிக அதிகமாகும். உயர்கல்வி சேர்க் கையில் இந்தியா முதலிடம் என்னும் மிகப் பெரிய சாதனையைத் தமிழ்நாடு படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை வளர்க்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக, 6ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை சென்னை அரசு பாரதியார் மகளிர் கல்லூரி யில் 5.9.2022 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுத லாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டில் 2,09,365 மாணவியர்கள் பயனடைந்து வந்த நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் என்பதே இத்திட்டத்தின் வெற்றிக்கு அடையாளமாகும். புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 3,28,280 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.
இச்சிறப்பு வாய்ந்த திட்டமானது 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுப டுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, “அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல் வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்” என இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நாளை (9ம் தேதி) கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 இலட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப்பயன் அடைவார்கள். இந்த திட்டத்திற்காக மு.க.ஸ்டாலின் 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது. பொருளாதார வசதிக்குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பிற்குப்பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது.
இத்திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தடைகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கி ருந்து கார் மூலம் கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு வருகிறார். அங்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தை அவர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இதனையடுத்து கோவை செம்மொழி பூங்கா நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதைத் தவிர பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைக்கான புதிய கட்டிடம், கோவை வஉசி மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு விடுதி, புலியகுளம் அரசு கல்லூரியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஆகியவற்றை காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
நாளை காலை 11.30 மணி அளவில் கோவை உக்கடத்தில் ரூ.481 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அந்த மேம்பாலத்தில் மு.க.ஸ்டாலின் காரில் பயணிக்கிறார்.
மதியம் 12.05 மணிக்கு உக்கடத்தில் இருந்து கணியூர் செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முன்னதாக கருமத்தம் பட்டியில் 116 அடி உயர கொடிக்கம்பத்தில் அவர் திமுக கொடி ஏற்றுகிறார்.
மதியம் 1மணிக்கு கோவை விமானநிலையம் வந்து சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.