fbpx
Homeபிற செய்திகள்கலைஞருக்கு பேனா சின்னம் அமையட்டும்!

கலைஞருக்கு பேனா சின்னம் அமையட்டும்!

13 வயதில் எழுதுகோல் பிடித்து, 95 வயது வரை தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் தான் கலைஞர் கருணாநிதி. முத்தமிழறிஞர், தமிழினத் தலைவராகத் கொண்டாடப்பட்டார்; கொண்டாடப்பட்டு வருகிறார்.
“என்னிடம் இருக்கும் செங்கோலை யாரும் பறித்துவிடலாம். ஆனால் எழுதுகோலை யாராலும் பறிக்க முடியாது” என்று நெஞ்சுரத்துடன் சொன்ன எழுத்துலகச் சக்கரவர்த்தி அவர்.

வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு தலைநகர் சென்னையில் கோட்டமும், அதே வள்ளுவனுக்கு 133 அடி உயரத்தில் குமரியில் திருவுருவச் சிலை யையும் அமைத்து தமிழுக்கே மகுடம் சூட்டியவர் கலைஞர்.

அப்படிப்பட்ட கலைஞரை நினைவுப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தபோது பலரும் தங்கள் கருத்துகளை ஆதரித்தும் எதிர்த்தும் தெரிவித்தனர். ஆனால் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ஏதோ தனக்குத் தான் ஆவேசமாக பேசத் தெரியும் என்ற தோரணையில் பேனா சின்னம் வைத்தால் நானே உடைப்பேன் என்று பேசினார். அதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு, சீமான் உடைத்தால் எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டா இருக்கும்? என்று சூடு கொடுத்தார்.

இந்த திட்டத்தை எதிர்க்கும் சீமான், பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தில் ஒன்றிய அரசு வல்லபாய் படேல் சிலை வைத்ததே அதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?
‘பேனா’ நினைவுச் சின்னம் கடலுக்குள் பலமைல் தூரத்தில் கட்டப்படவில்லை. 360 மீட்டருக்குள்தான் அமைக்கப்படுகிறது.

சீமான் போன்ற அறிவுஜீவிகள் சொல்வது படி பார்த்தால், கடற்கரையில் மீனவர் கிராமங்களே இருக்க முடியாது. துறைமுகங்களே இருக்க முடியாது. இருக்கும் துறைமுகங்கள் அனைத்தையும் உடைக்கத்தான் வேண்டும். உடைப்பாரா சீமான்?

மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது என்று இவர்களே நாளைக்குச் சொன்னாலும் சொல்வார்கள். ராமேசுவரம் மீனவர்களின் சாதாரண வலைகளில் கடலின் அரிய வகை கடல்பசு, சித்தாமை சிக்குவதாக தகவல் வெளியானது. அப்படியானால் மீனவர்கள் இனி வலைகளையே பயன்படுத்தக் கூடாது என்பார்களா?

புதிய தேசிய மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டத்தை உருவாக்கிய பா.ஜ.க. அரசின் மீனவர்களை நசுக்கும் சட்டத்துக்கு எதிராகப் போராடத் துணியாத இவர்கள், கலைஞரின் பேனாவுக்கு எதிராக பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது?- இவர்களை விட சுற்றுச்சூழலைக் காக்கும் அக்கறை தமிழக அரசுக்கு உண்டு.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாதபடி பேனா சின்னம் அமையும். அமைய வேண்டும் என்றே ஒட்டுமொத்த தமிழகமும் தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்!

படிக்க வேண்டும்

spot_img