fbpx
Homeதலையங்கம்ஆணவக் கொலை தடுக்க கடும் சட்டம் தேவை!

ஆணவக் கொலை தடுக்க கடும் சட்டம் தேவை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (50). அவரது மகன் சுபாஷ் (25) சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், அவரையும், அவரது மருமகள் அனுசூயா ஆகியோரையும், தண்டபாணியின் தாயார் கண்ணம்மாள் (70) வீட்டுக்கு வஞ்சகமாக வரவழைத்து, அவர்களிடம் பாசம் காட்டி ஏமாற்றி, அவர்கள் அசந்து தூங்கும் நேரத்தில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

தண்டபாணியின் கொலை வெறித் தாக்குதலை தடுத்த அவரது தாயாரையும் வெட்டியுள்ளார். இந்த சாதி வெறித் தாக்குதலில் கண்ணம்மாள், சுபாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டனர். மருமகள் அனுசூயா படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.

சாதி வேற்றுமைகளை களையவும், தீண்டாமை முறையை தடுக்கவும் ஈ.பெ.ராமசாமி, இளையபெருமாள் போன்ற சீர்திருத்த இயக்கத் தலைவர்கள் கடுமையாக போராடி, தமிழகத்தின் சமூக வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத சாதி, மதவெறி கருத்துக்களும், வெறுப்பு அரசியலும் பரப்பப்படுவதால் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் உடுமலையில் கவுசல்யா கண் எதிரே அவரது காதல் கணவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது. தற்போது கிருஷ்ணகிரியில் காதல் தம்பதிகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சாதி மறுத்து இல்லறம் ஏற்ற இளைஞர், 20 நாளில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாகும். மூடப்பழக்க வழக்கங்களை அழித்து, அறிவியல் கண்ணோட்டம் வளர்க்கும் சமூக சீர்திருத்தப் பணிகளுடன், ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வலுவான தனிச் சட்டம் மிக மிக அவசியமானது என்பதை இந்த ஆணவக் கொலைகள் அறிவுறுத்துகின்றன.

ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அத்தகைய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.

அதுவும் இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். அந்த சட்டம் மிக கடுமையானதாக… ஆணவக் கொலைகளை அடியோடு தடுக்கும் வல்லமை கொண்ட கடுமையான சட்டமாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img