உலக புற்றுநோய் தினம் வரும் 4ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சென்னையில் காவேரி மருத்துவமனை K10K என்ற பெயரில் புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தியது. இதில் 6,500 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.
மேலும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஓட்டம் நடத்தப்பட்டது. இது 10 கிமீ ஓட்டம் மற்றும் 5 கிமீ ஓட்டம் என இரண்டு பிரிவுகளாக நடந்தது. இவர்களின் ஆர்வமான பங்கேற்பு புற்றுநோய் விழிப்புணர்வில் அதிகரித்து வரும் அக்கறையை பிரதிபலிக்கிறது.
காவேரி மருத்துவமனை கதிரியக்க புற்றுநோயியல் இயக்குநர் டாக்டர் ஏ என் வைத்தீஸ்வரன் கூறுகையில், “உலகளவில் அதிக இறப்புக்கு புற்றுநோயே முக்கிய காரணம் என்பதால் அந்நோயை முன்கூட்டியே கண்டறிவது அவசியம். காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் புற்று நோய்க்கு விரிவான முன்னேறிய நவீன சிகிச்சை வசதிகள் உள்ளது” என்றார்.
தொடர்ந்து காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் தடுப்பு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.