கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட நிர்வாகம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தியது.
மருத்துவ மையம்
இந்த முகாமில் கரூர் பெஸ்ட் இன்பிரா, சென்னை சமர்த்தனம் அறக்கட்டளை, சுவாதி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, கேமி எண்டர்பிரைசஸ் கரூர், கரூர் அமிர்தா மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை, ஏசியன் பேப்ரிக்ஸ் கரூர், தி நியூ லைப் சர்வீஸ் சென்டர் ஓசூர், பெய்டிம் கரூர், ஆக்ஸ்போர்டு ஹோட்டல் நிர்வாக அறக்கட்டளை திருச்சி, நித்திகா அறக்கட்டளை கரூர், மால்லோ இன்டர்நேஷனல், ஏ ஆர் எஸ் அறிவியல் மற்றும் மேலாண்மை நிறுவனம், டாக்டர் ரெட்டீஸ் பவுண்டேஷன், ஸ்ரீ செங்க பாலிமர்ஸ்,ஏ.வி.எஸ் மற்றும் ஏ ஆர் எஸ் பெட்ரோல் பங்க், மணப்புரம் பவுண்டேஷன் என்ற 16 நிறுவனங்களில் இருந்து கணக்கர், புள்ளிவிவரம் பதிவேற்றம், பயிற்சி மற்றும் வேலை, செக்கிங் பேக்கிங், சேவை மற்றும் விற்பனை, தர கட்டுப்பாட்டாளர், தையல், செக்கர், பிரேக்கர் போன்ற பணிகளுக்கு 146 மாற்றுத்திறனாளிகள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.
இதில் தேர்வான 79 மாற்றுத் திறனாளி நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பணி ஆணை யினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், 35 மாற்று திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.12,500 மதிப்பில் ரூ.4,37,500 மதிப்பிலான திறன் பேசிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குனர் சீனிவாசன், மாற்றுத் திறனாளி அலுவலர் காமாட்சி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



