fbpx
Homeதலையங்கம்கருணாநிதி வீடியோவும் ஸ்டாலின் வீடியோவும்!

கருணாநிதி வீடியோவும் ஸ்டாலின் வீடியோவும்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விதம் தான் தமிழ்நாட்டை பரபரப்பான சூழ்நிலைக்கு தள்ளியது. பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த பின்னரும் கொஞ்சம் கூட கருணை இல்லாமல் அமலாக்கத்துறை அவரை சிறையில் அடைப்பதிலும் காவலில் எடுத்து விசாரிப்பதிலும் குறியாக இருக்கிறது.

செந்தில்பாலாஜி கைதுக்கு தமிழ்நாட்டு தலைவர்கள் மட்டுமல்ல, கார்கே, மம்தா, கெஜ்ரிவால், நிதிஷ்குமார் உள்ளிட்ட பல அகில இந்திய கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது இப்போது தேசிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவை எப்படி பாஜக மிரட்டியது என்பதை ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் மத்திய விசாரணை அமைப்புகள் எப்படி ஒருதலைபட்சமாக பாஜகவை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்களை குறிவைத்து ரெய்டு நடத்துகிறது என்பது பற்றி அவர் பட்டியலிட்டுள்ளார்.

அதோடு மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் வீடியோ ஒன்றை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன மெசேஜ் தான் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

அந்த வீடியோவில், அதிமுகவை போல் பிற கட்சிகளை மிரட்டி பணிய வைத்து விடலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது போன்ற கட்சி திமுக இல்லை. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லை திமுககாரர்கள். சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரிதான் ஒவ்வொரு திமுககாரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான்.

நேற்றில் இருந்து சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நிறைய கழக உடன்பிறப்புகள் தலைவர் கலைஞர் பேசிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். என்ன யாரும் அடிக்க முடியாது… ஞாபகம் வெச்சிக்க… நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது…’ என்று கலைஞர் பேசிய வீடியோ. அதுதான் இப்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம். நேருக்கு நேர் சந்திப்போம்‘’ என தெரிவித்துள்ளார்.

அரசியல் கருத்து மோதல்கள் நடந்தாலும் ஒன்றிய அரசுடனும் ஏன், தினமும் தொந்தரவு தந்து கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடனும் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இணக்கமான போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறார். ஒன்றிய & மாநில அரசுகளிடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? பாஜக அரசு புறவாசல் வழியாக மிரட்டல் விடுக்கும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் நிலையை மாற்றித் தானே ஆக வேண்டும். குனிய மாட்டோம், நிமிர்ந்து நிற்போம் என அவர் சொல்லியிருப்பதை ஊன்றிப் படித்தால் எல்லாம் புரியும்.

எடப்பாடி பழனிசாமி போல பாஜகவின் மிரட்டலுக்கு பயப்படுபவன் நானல்ல என்பதைத் தான் வீடியோவில் மு.க.ஸ்டாலின் அறுதியிட்டு கூறி இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஒன்றிய பாஜகவை எதிர்க்க முழுவீச்சில் துணிந்து விட்டார் என்பதைத் தானே வீடியோ காட்டுகிறது!

படிக்க வேண்டும்

spot_img