நம்ம தூத்துக்குடி மகிழ்வகம் மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் திறப்பு விழா தூத்துக்குடி டூவி புரத்தில் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, நம்ம தூத்துக்குடி மகிழ்வகத்தை (மகளிர் நம்பிக்கையான உறைவிடம்) திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் இந்த மகிழ்வகம் அமையக் கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கனிமொழி கருணாநிதி எம்.பியின் முன்னெடுப்பில் நம்ம தூத்துக்குடி மகிழ்வகம் (மகளிர் நம்பிக்கையின் உறைவிடம்) என்ற மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கான 20 படுக்கைகள் கொண்ட காப்பகத்தைத் துவக்கி வைத்த பின் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாற்றினார். மேலும், பல்வேறு தொழில் வளர்ச்சிக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தார்.
விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியதாவது: நம்ம தூத்துக்குடியில் மகிழ்வகம், மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் என்ற இந்த திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில், பானியன் கார்டன் மற்றும் சோயா தொண்டு நிறுவனங்கள் இணைந்து தூத்துக்குடியில் மகிழ்வகம் உருவாக்கியிருக்கும், இந்த நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பல இடங்களில் நடந்துகொண்டு இருப்பதை, உட்கார்ந்திருப்பதை, அலைந்து கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். நமது மனசு ஒரு நிமிடம் அவருக்காக வருத்தப்படுகிறது. ஆனால், கடந்து சென்று விடுவோம்.
அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்குவது என்று தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நிறுவனம் தான் பான்யன். இந்தியாவில் பல மாநிலங்களில் மனநிலை ஆரோக்கியக் கொள்கை (Mental Health Policy) உருவாக்கிய பான்யன் நிறுவனம். ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஒரு அறையில் அடைத்து வைத்து இருப்பார்கள், காலில் சங்கிலி கட்டி இருப்பார்கள், அவர்களைப் பற்றிப் பல சோகமான நிலையைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற் காக அவர்களின் உரிமைகளும், தகுதியும் இல்லை என்ற நிலை உள்ளது. அவர்களுக்கும் அத்தனை உரிமைகளும் இருக்கின்றது என்று நாம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு காலகட்டத்தில் தற்போது நின்று கொண்டிருக்கிறோம்.
கலைஞரின் வழியில் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான மிகப்பெரிய சேவைகளையும், திட்டங்களையும் உருவாக்கித் தந்திருக்கிறார்.
மனநிலை ஆரோக்கியம் என்பது இந்த உலகத்தில் மக்கள் இடையே இருக்கக்கூடிய பாகுபாடுகள், இந்தியாவில் உள்ள ஜாதி வேறுபாடுகள் மற்றும் ஆண், பெண் என்ற ஏற்றத்தாழ்வுகள், இது அத்தனையும் மனநிலையைப் பாதிக்கக்கூடிய விஷயங்களாக மாறிக்கொண்டிருக்கிறது.
மனநிலை ஆரோக்கியம் என்பது சில நபர்களுக்கானதாக மட்டும் பார்க்காமல், இது யாவருக்கும் வரக்கூடிய பிரச்சனை. அதை எதிர்கொள்ளும் முதல் படியாக இன்று தூத்துக்குடியில் இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகப்பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரக் கூடிய நிகழ்வு. இவ்வாறு அவர் பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சிவகுமார், பான்யன் இயக்குநர் கீர்த்தனா ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.