fbpx
Homeபிற செய்திகள்கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன

கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:


இதற்கான முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வரும் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும். ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்குவார். 


டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு நான்கு நாட்கள் முன்பாகத் தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக ரேஷன் கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ்புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம்செய்ய, வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்துப் பெறத் தேவையில்லை. 
விண்ணப்பப்பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்பபதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.


விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வருகைபுரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால் அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும்.
குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறத் தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒருபயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.

ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாதபட்சத்தில் குடும்பத்தில் உள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.


ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பப் பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து, உரிய ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு எடுத்துவர கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் (தொலைபேசி எண். 0422 2300569) தொடர்பு கொள்ளலாம்.


முதல்கட்டமாக வரும் 24ம் தேதி முதல் 4ம் தேதி வரை கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 212 ரேஷன் கடைகளிலும், அனைத்து வருவாய் வட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் ரேஷன் கடையிலும், வால்பாறை நகராட்சிப் பகுதியில் உள்ள 43 ரேஷன் கடைகளிலும் முதல் கட்டமாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 253 ரேஷன் கடைப்பகுதியிலும், அனைத்து பேருராட்சி பகுதிகளில் உள்ள 206 ரேஷன் கடைகளிலும், வால்பாறை நகராட்சி தவிர்த்து அனைத்து நகராட்சி பகுதிகளிலும் உள்ள 103 நியாய விலை கடைகளிலும், இரண்டாம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறவுள்ளது.


இவ்வாறு கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img