விண்ணில் பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் (பிஏஎஸ்) எனும் ஆய்வு நிலையத்தை வரும் 2035-ம் ஆண்டுக்குள் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைத்தல், விடுவித்தல் ஆகிய பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக தலா 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி ஆகிய இரட்டை விண்கலன்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டன. இந்த 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
அதன்பிறகு, அந்த விண்கலன்கள் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம்வந்தன. அவற்றுக்கு இடையே உள்ள தூரத்தை படிப்படியாக குறைத்து, ஜனவரி 16-ம் தேதி 2 விண்கலன்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன.
இதன்மூலம் ‘விண்வெளி டாக்கிங்’ தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு எனும் பெருமையை பெற்று இந்தியா சாதனை படைத்தது.
இந்நிலையில், சுமார் 2 மாதங்களுக்கு பிறகு, இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக நேற்று விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று விடுவிக்கப்படும் நிகழ்வின் காணொலி மற்றும் படங்களும் வெளியாகின. இது இந்திய அறிவியல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகளிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளியில் வலம்வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறையை வெற்றிகரமாக இஸ்ரோ நிகழ்த்தி உள்ளது. அதோடு விண்கலங்களை இணைத்தல், விடுவித்தல் ஆகிய இரட்டைச் சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் இஸ்ரோவின் ஒளிமயமான விண்வெளி பயணம் தொடரட்டும் – வாழ்த்துகள்!