மக்களின் தாகம் தணிக்கும் பணியில் ஈரோடு நகரைச் சேர்ந்த இலஞ்சி தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த 18 நாட்களாக ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே சுமார் 300 லிட்டர் மோரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஜானகி சுப்ரமணி நேரடியாக அங்கு சிக்னலில் இருக்கும் ஏராளமான பொது மக்களுக்கு கடுமையான உச்சி வெயில் நேரமான 11 முதல் 2 மணி வரை விநியோகித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 300 அடையாளம் காணப்படாத உடல்களை மாநகராட்சி மற்றும் போலீஸ் உதவியுடன் தனது மற்றும் நன்கொடைகள் மூலம் அடக்கம் அல்லது தகனம் செய்து சேவை செய்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் இறந்த நபர்களின் ஆத்மா சாந்தியடைய காசியில் நான்கு முறை சென்று அவர்களுக்காக பூஜை செய்துள்ளார். ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியும் மாவட்ட எஸ்பி அலுவலக சுவர்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வாசகங்கள் மற்றும் படங்களை தொண்டு நிறுவனம் மூலம் இவர் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் உள்ள பகுதிகள் சுற்றி பாதுகாப்பு இரும்பு கவசங்களை வைத்துள்ளார். இதன் மூலம் டிரான்ஸ்பார்மர்களுக்கும் அவ்வழியே செல்லும் மக்கள் மற்றும் கால்நடைகளுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அத்தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக, மாவட்ட ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ்களை பலமுறை பெற்றுள்ளார். மேலும், 4 முறை கவர்னர் அலுவலக நிகழ்வில் அலுவலக அழைப்பின் பேரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.