இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சாரா மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா பைனான்ஸ் நிறுவனம், வணிக வளர்ச்சிக்காகவும் மூலதனத்தை அதிகரிப்பதற்காகவும் முதல் முறையாக பொது வெளியீடு மூலம் பாதுகாக்கப்பட்ட பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடி நிதி திரட்ட உள்ளது.
இந்த பத்திரங்கள் 10.50% வரை வருவாய் அளிப்பதுடன் பணத்துக்கு அதிக பாதுகாப்பை வழங்குகிறது. பத்திரம் வெளியீடு டிசம்பர் 4 முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. ரூ.73,066 கோடி கடன் சொத்து கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் குழும நிறுவனம் தான் ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா நிறுவனம்.
இதன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான என்.வெங்கடேஷ் கூறுகையில், ‘ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா ஃபைனான்ஸ் இந்தியா முழுவதும் சுமார் 1,500 கிளைகள் மூலம் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.
இது பின்தங்கிய, நிதி சேவைகள் கிடைக்காத மக்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரின் கடன் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பத்திரங்கள் வெளியீடு மூலம் திரட்டப்படும் நிதியானது, இதுபோன்ற வாடிக்கையாளர்களின் கடன் தேவையை பூர்த்தி செய்யவும், வணிக வளர்ச்சியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும்‘ என்றார்.



