தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சாலப்பாறை மலை கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலை முறைகளாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால், அன்றாட வாழ்க்கையில் கடும் சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில குழந்தைகள் போடிநாயக்கனூர் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் தங்கி கல்வி பயின்று வருவதாகவும், சாலை வசதி இல்லாத காரணத்தால் சில குழந்தைகளால் பள்ளிக்கே செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு நிலப்பட்டா வழங்குவதுடன், கிராமத்திற்கு சாலை வசதியையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். தங்களின் நீண்டகால கோரிக்கையை அரசு விரைந்து பரிசீலித்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



