கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
உலகின் மிக மிக சில இடங்களில் மட்டுமே இன்னமும் பழமை மாறாமல் நீராவி மூலம் இயங்கும் ரயில்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயக்கப்பட்டு வரும் இந்த நீலகிரி மலைரயிலும் ஒன்று. இதற்கு பெருமை சேர்க்கும் விதமாக இம்மலைரயில் உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவோல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலைரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று ஜெர்மன் நாட்டை சேர்ந்த விமான படை அதிகாரிகள் நீலகிரி மலை ரயிலில் ஆர்வமுடன் பயணித்து மகிழ்ந்தனர்.
கோவையில் நடைபெறும் சர்வதேச ராணுவ கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்திருந்த ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ ஜெர்ஹர்டஸ் தலைமையில் 15 பேர் கொண்ட ராணுவ உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று காலை 6 மணிக்கு வருகை தந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மலைரயில் தொடர்பான கண்காட்சியை கண்டு ரசித்தனர். தங்களை வரவேற்ற ரயில்வே அதிகாரிகளிடம் மலைரயிலின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் ரயில்வே துறையால் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டியில் அமர்ந்து பிற சுற்றுலா பயணிகளோடு சென்ற மலைரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
இந்த அதிகாரிகள் குன்னூர் வெல்லிங்டனில் உள்ள இந்திய ராணுவ முகாமிற்கும் சென்றனர்.