நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 882 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. ‘இத்திட்டத்தை செயல் படுத்தக்கூடாது’ என, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிப் காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜனவரி. 2 முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவித்தனர். அதன்படி என்.புதுப்பட்டி பஞ்சாயத்து கஸ்தூரிமலை அடிவாரத்தில், விவசாயி கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆடு, மாடு களுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
விவசாயிகள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், ரவீந்திரன், பழனி வேல், மோகனூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், வளையப்பட்டி முன்னாள் தி.மு.க. பஞ்சாயத்து தலை வர் வீரமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் போராட் டத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது, பெண் விவசாயி ஒருவர், எங்கள் விளைநிலங்களையும் கால்நடைகளையும் காப்பாற்ற வேண்டும் என, அவரது காலில் விழுந்து கதறி அழுதார். அதற்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக இரண்டு மாதங்கள் காத்திருங்கள். அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சி அமையும். அப்போது இந்த திட்டத்தை ரத்து செய்துவிடுகிறோம்” என உறுதி அளித்தார்.



