ஈரோடு மாநக ராட்சியில் வரும் வெள்ளிக்கிழமை முதல் வாரந்தோறும் மின்னணுக் கழிவுகளை (இ-வேஸ்ட்) தனியாகச் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் என நான்கு வகைகளாகக் குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும். தற்போது பெரும்பாலான மக்கள் மக்கும், மக்காத குப்பைகளை மட்டுமே பிரித்து வழங்குகின்றனர். சுகாதாரக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகளைத் தனியாகப் பிரித்து வழங்குவதில்லை.
இதை மாற்றும் வகையில், வரும் வெள்ளிக்கிழமை தோறும் மின்னணுக் கழிவுகளை மாநகராட்சி சார்பில் தனியாகச் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் கழிவுகள் முறையாகப் பிரிக்கப்பட்டு, உரிய முறையில் அகற்றப்படும்.
மாநகராட்சிக்குச் சொந்தமான 21 இடங்களில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடங்களில் (மைக்ரோ கம்போஸ்ட் யார்டுகள்) மக்கும், மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பொதுமக்கள் குப்பைகளை முறையாகப் பிரித்து வழங்காததால், அவற்றைத் தனித்தனியாகப் பிரிக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
மக்கும், மக்காத குப்பைகளுடன் பிளாஸ்டிக், இரும்பு, செம்பு, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களையும் பொதுமக்கள் கலந்து போடுகின்றனர். இதனால், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதிலும், எரியூட்டும் கருவிகள் மூலம் அகற்றுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, குப்பைகளைத் தொடக்கத்திலேயே தனித்தனியாகப் பிரித்து வழங்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மொத்தத்தில் சுமார் 21 வகைகளாகக் கழிவுகளைப் பிரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு பிரிக்கப்படும் கழிவுகளை வாங்குவதற்கு போதிய நிறுவனங்கள் இல்லாததால், பிளாஸ்டிக் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
மக்கும் குப்பைகள் வெண்டிபாளையம் உரக் கிடங்கில் கொட்டப்பட்டு, உரமாக மாற்றப்படுகின்றன. தினமும் சேகரிக்கப்படும் சுமார் 60 டன் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படு கிறது.
நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பைகளைக் கையாள வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க மாநகராட்சியும் கழிவுகளை மேலாண்மை செய்து வருகிறது.
மாநகராட்சியில் சுமார் 1,600 தூய்மைப் பணி யாளர்கள் பணியாற்று கின்றனர். இவர்களில் 360 பேர் நிரந்தர பணியாளர்கள், இதர ஊழியர்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு அதிக பட்சமாக நாளொன்றுக்கு ரூ.760 ஊதியம் வழங்கப் படுகிறது. குப்பைகளை முறையாகப் பிரித்து வழங்கா ததால், வெண்டிபாளையம் உரக்கிடங்கில் தேவையற்ற கழிவுகள் மலைபோல் குவிந்து வருகின்றன. இதனால் மாநகராட்சிக்கு பெரும் சுமை ஏற்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் இந்தூர் நகரம் தொடர்ந்து நாட்டின் முன்னணி நகரங்களில் ஒன்றாக உள்ளது. ஈரோடும் சில ஆண்டுகளுக்கு முன்பு தூய்மைப் பணிகளில் சிறப்பான இடத்தில் இருந்தது. தற்போது தரவரிசையில் 150-வது இடத்துக்கும் கீழே சென்றுள்ளது. ஈரோட்டை மீண்டும் தூய்மையான நகரமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.



