ஜப்பானில் மனிதவளம் குறைந்துவருவதால் வரும் 2040- ஆம் ஆண்டிற்குள் அந்த நாட்டில் 2.70 லட்சம் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜப்பானில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்வு ஈரோடு புத்தகத் திருவிழா வளாகத்தில் உள்ள உலகத் தமிழர் படைப்பரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். இதில், மக்கள் சிந்தனைப் பேரவை ஜப்பான் கிளை ஆலோசகர் ச.கமலக்கண்ணன், தலைவர் வே.கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் ச.சே.ராஜலஷ்மி ஆகியோர் பேசியதாவது:
ஜப்பான் நாட்டில் மனிதவளம் குறைந்துவரும் நிலையில் வரும் 2040- ஆம் ஆண்டுக்குள் அந்த நாட்டில் கூடுதலாக 2.70 லட்சம் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அப்போது அந்த நாட்டில் பணியாற்றும் வெளிநாட் டினரின் எண்ணிக்கை 1 மில்லியனாக (10 லட்சம்) இருக்கும். இப்போது அந்த நாட்டில் 50 வயதைக் கடந்தவர்கள் சுமார் 65 சதவீதம் பேர் உள்ளனர். தொடர்ந்து பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
இப்போது அந்த நாட்டில் வியத்நாம், சீனா, நேபாள நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனர். இந்தியர்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனர்.
இப்போது சில ஆண்டுகளாக ஜப்பான் பல்கலைக்கழகங்கள் அனைத்து துறைகளிலும் பட்டப் படிப்புகளை ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் இந்தப் பல்கலைக் கழகங்களில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு வைக்கப் படுகின்றன. படிக்க தேர்வு செய்யப்படும் மாணவர் களுக்கு அந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கல்வி உதவித்தொகை அளிக்கின்றன.
படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் ஜப்பான் மொழியின் 5 படி நிலைகளில் 3 படி நிலைகளை கற்று தேர்ச்சி பெற்றால் அந்த நாட்டில் உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
அந்த நாட்டில் வேலைபார்க்க ஜப்பானிய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் பல்வேறு நாடு களில் மாணவர்களுக்கு இந்த மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் நம் நாட்டில் மதிப்பில் ரூ.1.10 லட்சம். அந்த நாட்டில் வாழ்க்கை நடத்த செலவு அதிகம் என்றாலும், அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறது. ஜப் பான் நாட்டில் உள்ள நிறுவனங்கள் இப்போது தொடர்பு மொழியாக ஆங்கில மொழியை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
மனிதவள பற்றாக்குறையால் வரும் ஆண்டுகளில் வெளிநாட்டினருக்கு அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் ஜப்பான் மொழியை கற்றுக் கொண்டு, அந்த நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிப்பதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



