குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கோவை கீதா ஹால் சாலையில் உள்ள திவ்யோதயா பல்சமய அமைப்பும், சவுத் இந்தியன் வங்கியும் (பிக் பஜார் தெரு கிளை) இணைந்து பள்ளி மாணவர்களுக்காக ஒரு ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்தன. “உலகிற்கு எனது செய்தி” என்ற கருப்பொருளில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்காக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. போட்டி நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்டது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 25 பள்ளிகளிலிருந்து சுமார் இருநூறு மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற் றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மேலும், பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் நிறைவு விழா, 2026 நவம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு திவ்யோதயா அரங்கத்தில் நடைபெறும்.

குழந்தைகள் ஓவியம் வரைவதில் மும்முரமாக இருந்தபோது, பெற்றோர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமய நல்லிணக்கக் கலைக் கூடத்தைப் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மழைநீர் சேகரிப்புக் குளத்தின் மீது கட்டப்பட்டு, இந்தியாவுக்கான மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் ஸ்தூபி, பார்வையாளர்களின் சிறப்புக் கவனத்தை ஈர்த்தது. திவ்யோதயாவின் இயக்குநர் அருட்தந்தை டாக்டர் தாமஸ் சீரன், சி.எம்.ஐ., பார்வையாளர்களுக்காக திவ்யோதயாவின் சமய நல்லிணக்கத்தின் செயல்பாடுகளையும் குறிக்கோள்களையும் அறிமுகப்படுத்தும் ஒரு காணொளிக் காட்சியையும் திரையிட்டார்.



