இந்திய அளவில் ஆகஸ்ட் 23ஆம் நாள், ‘தேசிய விண்வெளி நாள்’-ஆக கொண்டாடப்படும் நிலையில், அதனையொட்டி இமாச்சல் பிரதேசத்தில் இருக்கிற பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அனுராக் தாக்கூர், “முதன்முதலில் விண்வெளிக்கு சென்றவர் யார்” என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் “நீல் ஆம்ஸ்ட்ராங்” என பதிலளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர், “நான் முதன்முதலில் விண்வெளிக்கு சென்றவர் அனுமன் என நினைக்கிறேன். இவ்வேளையில், பள்ளி முதல்வருக்கும், மாணவர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். பாடப்புத்தகங்களை கடந்து நம் சிந்தனைகள் இருக்க வேண்டும். நம் பண்பாடுதான், நமக்கு அறிவு” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இக்கருத்தை பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
‘யுரி ககாரின்’ என்கிற ரஷ்ய விண்வெளி வீரர் 1961ஆம் ஆண்டு 108 நிமிடங்கள் விண்ணில் பறந்து, விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சரியான தகவலைச் சொல்லி அவர் மாணவர்களுக்கு வழிகாட்டி இருக்க வேண்டும்.
அறிவியல்பூர்வமான வரலாற்றுத் தகவல்களை எல்லாம் புறந்தள்ளி பாஜக எம்பி பேசியதும் மாணவர்களிடம் தவறான தகவலை தந்து அவர்களை புராணங்களின் அடிப்படையில் வழி நடத்த முற்பட்டிருப்பதும் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிய கல்வி அமைச்சராவது அனுராக் தாக்கூர் எம்பியின் கருத்தை உடனடியாக மறுத்திருக்க வேண்டும். அல்லது தவறை சுட்டிக்காட்டி அறிவுறுத்தல்களை வழங்கி இருக்க வேண்டும். ஏனென்றால் இது மாணவர்களின் அறிவியல் கல்விக்கே உலை வைக்கும் செயல்.
ஆனால் எப்போதும் போல தமிழ்நாட்டில் இருந்துதான் எதிர்ப்புக்குரல் முழங்கி இருக்கிறது. தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, “பள்ளி மாணவர்களிடம் புராணங்களைக் கூறி, அறிவியலுக்கு புறம்பான கருத்து தெரிவித்து தவறாக வழிநடத்துவது வருத்தமளிக்கிறது. பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூரின் இந்த நடவடிக்கை, மாணவர்களின் கல்வி அறிவுக்கு இழுக்காக அமைந்துள்ளது” என சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
அதே போல மதுரை எம்பி. சு.வெங்கடேசனும் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனார் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விஷயமல்ல. பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது என்று கிண்டலடித்துள்ளார்.
இனியாவது பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் இதுபோல அறிவியலுக்கு எதிரான கருத்துகளை குறிப்பாக மாணாக்கர்கள் மத்தியில் பரப்பிட முற்படுவதற்கு அக்கட்சியின் மேலிடம் தடை போட வேண்டும். மத கோட்பாடுகளை வளர்ப்பது என்பது வேறு விஷயம். அதற்கான இடங்களும் வேறு.
அதே நேரத்தில் மாணாக்கர்களின் அறிவியல் கல்வியோடு விளையாடுவது தவறான வழிகாட்டுதலாகத் தான் இருக்க முடியமே தவிர, அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒருபோதும் உதவாது என்பதே உண்மை; அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்!



