மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.113.53 கோடி மதிப்பீட்டிலான
வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. பிருந்தாதேவி செய்தியாளர் பயணத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இச்செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.113.53 கோடி மதிப்பீட்டிலான 3,172 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 2,821 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 351 பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், இன்றையதினம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், ஓலப்பட்டி ஊராட்சி, பாரப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.14.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கட்டடத்தினையும், ரூ.10.24 லட்சம் மதிப்பீட்டில் பாரப்பட்டியில் பம்ப் ஹவுஸ் முதல் சௌடேஸ்வரி நகர் வரை அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் நடைபாதையினையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.29 லட்சம் மதிப்பீட்டில் ஓலப்பட்டி ஊராட்சி, பனந்தோப்பு அருகே புதியதாக குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தினையும், வாழதாசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் கணினி அறைக்கட்டடம் மற்றும் ரூ.34.60 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதையும், பள்ளி அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு மற்றும் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அரங்கனூர் ஊராட்சியில் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.13.79 லட்சம் மதிப்பீட்டில் அரங்கனூர் ஆசாரி தெருவில் சிவானந்தன் வீடு முதல் சங்கர் வீடு வரை அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் கான்கிரீட் நடைபாதையினையும், அரங்கனூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



