fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே குட்டையில் முதலை - மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே குட்டையில் முதலை – மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் பகுதியில் குட்டை ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் வடவள்ளி,தாளத்துறை,கோபி ராசிபுரம்,பட்டக்காரனூர் கிராமத்தின் வழியாக பவானி ஆற்றினை சென்றடையும்.

இந்த குட்டையில் சில மாதங்களுக்கு முன்னர் பெய்த கன மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது.இந்த நிலையில் குடியிருப்புகளின் அருகே அமைந்துள்ள இந்த குட்டையில் முதலை நடமாட்டம் இருப்பதை நேரில் கண்ட உள்ளூர் மக்கள் இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் குட்டையில் முதலை இருப்பதை அப்பகுதி மக்களின் மூலமாக உறுதி செய்தனர்.தொடர்ந்து குட்டையை சுற்றிலும் நைலான் வலையை கட்டி வேலி அமைத்துள்ளனர்.

மேலும்,குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் வகையில் மின்மோட்டார் மூலம் நேற்று தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். குட்டையில் உள்ள தண்ணீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட பின்னர் அங்குள்ள முதலையை சுற்றி வளைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு அப்பகுதி முழுவதையும் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில் பட்டக்காரனூர் குட்டையில் முதலை நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால் குட்டையில் உள்ள முதலையை பிடிக்க முதற்கட்டமாக குட்டையில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

முதலை எங்கும் தப்பி விடாமல் இருக்க சுற்றிலும் நைலான் வலை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பின்னரே முதலையை பிடிக்க முடியும் என்பதால் தொடர்ந்து இரவு வேளையிலும் பணியை தொடர்ந்து கொண்டுள்ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img