fbpx
Homeபிற செய்திகள்பெண்ணின் வயிற்றில் 36கிலோ கட்டியை அகற்றி விஜிஎம் மருத்துவமனை மருத்துவர் குழு சாதனை

பெண்ணின் வயிற்றில் 36கிலோ கட்டியை அகற்றி விஜிஎம் மருத்துவமனை மருத்துவர் குழு சாதனை

பெண்ணின் வயிற்றில் இருந்து 36 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றி கோவை ராமநாதபுரம் விஜிஎம் மருத்துவமனை மருத்துவர் குழு சாதனை படைத்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 45). இவர் கடந்த ஐந்து வருடங்களாக வயிறு வீக்கம் மற்றும் வலியினால் அவதிப்பட்டு வந்தார். வயிறு வீக்கம் பெரிதாகவே, மூச்சுவிட முடியாமலும் திணறினார்..

இந்நிலையில், அவர் விஜிஎம் மருத்துவமனைக்கு முதல்முறையாக சிகிச்சைக்காக வந்தார். அவரை சர்ஜிகல் கேஸ்ட்ரோ என்றோலஜிஸ்ட் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் பரிசோதித்தார். ஸ்கேனில், தமிழ் செல்வியின் வயிற்றில் சினைப்பையில் ராட்சச கட்டி வளர்ந்திருப்பது தெரிய வந்தது.

தமிழ்ச்செல்வியின் முந்தைய மருத்துவ குறிப்பீடுகளை பார்த்தபோது, இந்த கட்டி சிறிதாக இருந்தபோதே தெரிய வந்துள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டதனால், கட்டி பெரிதானது. கடும் வலியுடனும், மூச்சு விட முடியாமலும் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழுவினர் திட்டமிட்டனர். டாக்டர் கோகுல்கிருபா சங்கர் தலைமையில், கேஸ்ட்ரோ மருத்துவர்கள் சுனைபத், அருண், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன், ரத்த நாள சிகிச்சை நிபுணர் டாக்டர் கேசவன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் ஹரிஷ் உள்ளிட்டோர் இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர்.

வயிற்று பகுதியிலிருந்த 36 கிலோ அளவிலான ராட்சத கட்டி அகற்றப்பட்டது.
அந்த கட்டியின் எடை, தமிழ் செல்வியின் உடல் எடையில் சரி பாதி எடையாகும். 4 மணி நேரம் 30 நிமிடத்தில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் குணமடைந்து வருகிறார்.

இந்திய அளவில் உடல் குறைபாடுடன் வந்த ஒருவரின் வயிற்றிலிருந்து 36 கிலோ எடையுடன் கட்டி அகற்றப்பட்டது இதுவே முதல்முறை. இதுபோன்ற ராட்சச கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சைகள் இந்திய அளவில் வெகு சிலவே வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு இருக்கின்றன .

அந்த வகையில் தமிழ்ச்செல் வியின் வயிற்றில் வளர்ந்த ராட்சச கட்டியை அகற்றிய வி ஜி எம் மருத்துவர்கள் பெரும் சாதனையை செய்திருக்கின்றனர் . இந்த நுட்பமான அறுவை சிகிச்சையை செய்த டாக்டர் கோகுல் கிருபா சங்கர் தலைமையிலான மருத்துவர்கள் , செவிலியர்கள் அடங்கிய மருத்துவர் குழுவை பலரும் பாராட்டி ஊக்குவித்தனர்.

டாக்டர் கோகுல் கிருபா சங்கர் தலைமையிலான மருத்துவர்கள் குழு 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img