கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி பிரிவு சார்பில் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் சிறப்பு கல்வி ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பணியிடைப் பயிற்சி ஒண்டிப்புதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கலையரங்கில் செவ்வாய் முதல் வியாழக்கிழமை வரை நடந்தது.
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு உள்ளடங்கிய கல்வி பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து நடந்த இந்த முகாமின் அமர்வுகளில் மாற்றுத்திறன் குழந்தைகளின் குணாதிசயங்கள், குழந்தை பருவ செயல்பாடுகள், கண்டறிவது எப்படி?, அவர்களின் பெற்றோர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கும் விதம், குழந்தைகளுக்கு தகுந்த உபகரணங்களை பயன்படுத்தி கற்பிக்கும் முறைகள், குழந்தைகளுக்கான தனிநபர் பாடத்திட்டத்தை வகுக்கும் முறைகள், முதலுதவி, சுய பராமரிப்பு, அனைத்து வகையான மாற்றுத்திறன் குழந்தைகளுக்குமான அன்றாட வாழ்க்கைத் திறன் பயிற்சிகள் வழங்கும் முறைகள் குறித்து மாவட்ட கருத்தாளர்கள் அன்னபூரணி, சபிதா, பூங்குழலி, பேரூர் வட்டார மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் விளக்கி கூறினார்.
நேற்று (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் நடந்த நிறைவு விழாவிற்கு உதவி மாவட்ட திட்ட அலுவலர் இளமுருகன், உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்து நிறைவு உரையாற்றினர்.
பயிற்சியில் 60க்கும் மேற்பட்ட சிறப்பு கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட உள்ளடங்கிய கல்வி பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.



