கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும் தென்னிந்திய ஆய்வு மையமும் இணைந்து நடத்திய ”சிந்து சரஸ்வதி நாகரிகம்” (சிந்து நதி முதல் தாமிரபரணி வரை – நம்பிக்கை மற்றும் நாகரிகத்தின் நோக்கும் போக்கும்) என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா இன்று (19ம் தேதி) காலை 11 மணிக்குக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாரப்பகவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: எகிப்திய நாகரிகம் நைல்நதிக் கரையிலும் மெசபடோமியா நாகரிகம் டைக்கிரிஸ் நதிக்கரையிலும் தோன்றியது போல நமது இந்திய நாகரிகமும் ஆற்றங்கரையிலேயே தோன்றியது.
இந்திய நாகரிகம் உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் ஆகும். இங்கிலாந்தில் உள்ள எடின்பெரா, கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் கணிதம், மருத்துவம், வானியல் உள்ளிட்ட தொன்மையான இந்திய அறிவு மரபைக் கண்டறிந்து, மொழிபெயர்த்து ஆவணப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தின.
மொழி, மண்டலம் என்ற அடிப்படையில் வேறுபட்டாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் பாரத நாட்டின் தத்துவம். சங்க இலக்கியத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இந்த ஒற்றுமை உணர்வு பதிவாக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி நதியைப் பற்றி ரிக்வேதம் குறிப்பிடுகிறது. இந்த நதி தனித்துவம் வாய்ந்தது. சரஸ்வதி நதி பற்றிய செய்திகள் புராணமல்ல. அறிவியல்ரீதியாக சரஸ்வதி நதி இருந்தது உறுதியாகியுள்ளது. மகாபாரதத்தில் அந்த நதியைக் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி வரவேற்புரை ஆற்றினார். தென்னிந்திய ஆய்வு மையத்தைச் சார்ந்த தரணி குணசேகரன் கருத்தரங்க நோக்கவுரையாற்றினார். கருத்தரங்க ஆய்வுக்கோவையை ஆளுநர் வெளியிட்டார்.
தொடக்க விழாவின் நிறைவில் கல்லூரி மேலாண்மைக்குழு பொருளாளர் மருத்துவர் ஓ.என். பரமசிவன் நன்றி கூறினார். தென்னிந்திய ஆய்வுமையத்தின் இயக்குநர் சந்தீப், கல்லூரி முதல்வர் முனைவர் வே.சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து வருகை தந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.



