கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பழங்குடியினரின் வாழ்வியல் முறைகளும், மரபறிவு நுட்பங்களும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கல்லூரியின் பொன் விழா ஆண்டை ஒட்டி நடைபெற்ற இந்த கருத்தரங்கை தமிழ்த் துறை சுயநிதி பிரிவும், பழங்குடிகள் ஆய்வு மற்றும் நல மையமும் இணைந்து நடத்தின. தமிழ்த்துறை தலைவர் அரிச்சந்திரன் வரவேற்றார். கல்லூரி செயலரும் இயக்குநருமான சி.ஏ.வாசுகி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ச.அண்ணாதுரை பங்கேற்று கருத்தரங்கு ஆய்வு மலரை வெளியிட்டு பேசினார். கல்லூரி முதல்வர் மா.லட்சுமணசாமி, புதுடெல்லி இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் குழுவின் முதுநிலை ஆய்வாளர் சி.மகேசுவரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆய்வாளர்கள் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பித்து பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியின தலைவர்களான நோர்தோ குட்டன், தயாபரி, அனிஷ்குமார் ஆகியோர் தங்களது மரபார்ந்த வாழ்க்கை முறைகள் குறித்து பேசினர்.
நிறைவு விழாவில் புதுச்சேரி பிரெஞ்ச் ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் அரிச்சந்திரன் நன்றி கூறினார். கருத்தரங்கில் பழங்குடியினரின் கைவினை பொருட்கள், தேன், மிளகு, குங்கிலியம் ஆகியவை விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.