கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறையில் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக CRT-D எனப்படும் கார்டியாக் ரீசின்க்ரோனைசேஷன் தெரபி டிஃபிபிரிலேட்டர் கருவி இதய நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த சரவணகுமார்(54) என்பவர் வென்ட்ரிகுலர் டாக்கிகார்டியா எனப்படும் சீரற்ற இருதயதுடிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உடனடியாக ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து அவருடைய உயிரை காப்பாற்றினர்.
மேலும் அவருடைய நோயிற்கான காரணத்தை ஆராய்ந்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இது போன்ற சீரற்ற இருதயதுடிப்புடன் பல முறை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர். இதன் விளைவாக அவருக்கு இருதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இந்த சீரற்ற இருதயதுடிப்பை சரிசெய்ய மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்கு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.
இவ்வாறு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்ட பின்னரும், சீரற்ற இருதயதுடிப்பு மற்றும் இருதய செயலிழப்போடு அவதிபட்டுவந்த அவருக்கு CRT-D எனப்படும் அதி நவீன கருவியை பொருத்த இருதவியல் துறை மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
அதன்படி அந்தக் கருவியை வெற்றிகரமாக பொருத்தி தங்கள் சாதனையைப் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை அளித்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



