கோவை திருச்சி ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலய பிரதிருஷ்டை விழாகடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளும், சிறப்பு ஆராதனை கூட்டமும் நடந்தது.
கடந்த ஞாயிறு அன்று அசன பண்டிகைகொண்டாடப்பட்டது. காலை நடந்த சிறப்பு ஆராதனை கூட்டத்தில் திருச்சி பிஷப் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை பாதிரியார்கள் ராஜேந்திர குமார், நெல்சன் சதீஷ், பிரவீன் ஆகியோர்சிறப்பு ஆராதனை நடத்தினார்கள்.
மதியம் 11 மணிக்கு அசன விருந்து தொடங்கியது.எ இதற்காக ஆலய வளாகத்தில் ஒரே நேரத்தில் 1200 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவில் இருக்கைகள் மேஜை போடப்பட்டு இருந்தது. மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு மட்டன் குழம்பு, சாம்பார், ரசம், அவியல், பாயசத்துடன் விருந்து வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் பிரபல சமையல் கலை வல்லுநர் கோயில் பிச்சை தலைமையில் 50 சமையல் கலைஞர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக 2500 கிலோ மட்டன் பயன்படுத்தப்பட்டது. உணவு பரிமாறும் நிகழ்ச்சியில் 120 தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய செயலாளர் பாக்கிய செல்வன், பொருளாளர் பி.காட்வின், டி.சி. உறுப்பினர்கள் ஜே.பி.ஜேக்கப், எஸ்.என்.ஜேக்கப், ஜே.ஏ.பரமானந்தம், ஜாஸ்மின், டயோசீயேசன் பொருளாளர் டி.எஸ்.அமிர்தம், பி.சி உறுப்பினர்கள் குமார், ஆடம் அப்பாதுரை, பிரசாந்த் ராஜ்குமார், ஆல்வின், ஸ்டீபன் ஜெபசிங், அதிசயராஜ் ஜெயக்குமார், பியூலா சார்லி, வெர்ஜினா அருண் ஆகியோர் செய்திருந்தனர்.