ஒடிசா மற்றும் ஆந்திராவிலிருந்து ரயில்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயில்களில் தொடர் சேதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (16ம் தேதி) கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயாராஜ் மேற்பார் வையில் காவல் ஆய்வாளர் குமரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசாரும் கோவை ரயில்வே ஸ்டேசனில் மோப்ப நாய் டைகர் உடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், ஒடிசா, ஆந்திரா வழியே வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் ஏறி ஒவ்வொரு பெட்டியிலும் சோதனையிட்டனர். மேலும் பிளாட்பார்ம் நெ.1 மற்றும் 2ல் ஆந்திராவிலிருந்து வந்த ரயில்களில் இருந்து இறங்கி சென்ற பயணிகளின் உடைமைகளை மோப்ப நாய் கொண்டு சோதனை செய்தனர்.
மேலும் தன்பாத் ரயிலில் ஏறி சோதனை செய்ததில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் ஒடிசா ஆந்திராவிலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதை தொடர்ந்து கண்காணித்து பிடித்து வருகிறோம்.
கடந்த எட்டு மாதங்களில் 300 கிலோ கஞ்சா மற்றும் இதனை கடத்தி வந்த இருபது நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதேபோல் இத்தகைய சோதனை கோவை ரயில்வே ஸ்டேசனிலும் ரயில்களிலும் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



