கோவை மாவட்டம் வேளாண்மைத் துறையின் கீழ், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தில் சேர்ந்து வேளாண் பட்டதாரிகள் பயன் பெறலாம் என கோவை
மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். வஅர் கூறியிருப்பதாவது:
இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் கடந்த 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி உதவி, வட்டி மானியம் போக கூடுதல் மானியமாக விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வங்கி கடன் ஒப்புதல் பெற்ற பிறகு, பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.இந்த திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பிரிவில் குறைந்த பட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினிதிறன் பெற்ற மற்றும் குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர்.
தேவையான ஆவணங்களான 10 மற்றும் 12-ம் வகுப்புசான்றிதழ், பட்டபடிப்பிற்கான சான்றிதழ், ஆதார்அட்டை, குடும்பஅட்டை, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவை ஆகும். இந்த திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள பட்டதாரிகள் அக்ரீஸ் நெட் எனும் இணைய வலைதள முகப்பில் பதிவு செய்ய வேண்டும். தங்களின் விரிவான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர், வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.