தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா மற்றும் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் சு. சாந்தகுமார் ஆகியோர் தலைமையில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் பங்கேற்புத் துறைகளுக்கான கூராய்வுக் கூட்டம் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆணைய உறுப்பினர்கள் ஸ்ரீ காவியா நாகராஜன், முனைவர் வி. உஷா நந்தினி முன்னிலை வகித்தனர்; பள்ளிக்கல்வி, சமூகநலம், காவல், சுகாதாரம், குழந்தைத் தொழிலாளர் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஸிஜிணி சட்டத்தின் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, பள்ளி இடைநிறுத்தம் ஆன குழந்தைகளை மீண்டும் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குழந்தைத் திருமணம் தொடர்பான புகார்கள் மீதான நடவடிக்கைகள், பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகளின் விவரங்கள், குழந்தைத் திருமணம் மற்றும் போக்சோ வழக்குகள் பதிவு நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் ஆய்வுகள் மற்றும் வழக்குகள், 18 வயதிற்குட்பட்ட இளவயது கர்ப்பங்கள், குழந்தைகள் நலக்குழுவில் 3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழுவின் காலாண்டுக் கூட்டங்கள், நிதியுதவித் திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகள், குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் மீதான நடவடிக்கைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. 1098 குழந்தைகள் உதவி எண்ணில் பெறப்பட்ட புகார்கள், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை விடுதிகள், நிறுவனங்களில் தீயணைப்புக் கருவிகள் நிலை, ஆட்டிசம் குழந்தைகள் பயிற்சி மையங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, ஆணையத் தலைவர் சென்னிமலை ஒன்றியம் ஞானிபாளையம் வள்ளுவர் அரசு நிதியுதவி துவக்கப்பள்ளி, பெருந்துறை ஸ்ரீ கங்கா மெட்ரிகுலேசன் பள்ளி மற்றும் பெருந்துறை அக்னி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ந. உமாமகேஸ்வரி, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (நிறுவனம் சாரா) அலுவலர் ச. இராஜேந்திரன், சமூக நீதித்துறை அலுவலர் சு. சுடலைமணி உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



