தூத்துக்குடி – எட்டயபுரம் சாலையில் உள்ள ஏ.பி.சி. மகாலக்ஷ்மி பெண்கள் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். புதிதாக கட்டப்பட இருக்கும் ஆடிட்டோரியம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியதாவது:
ஒரு பெண் கல்வி பெறுவதற்கும், பள்ளிக்கூடம் செல்வதற்கும், அடுத்த கட்டமாக கல்லூரிக்கு சென்று படிப்பதற்கும் எத்தனை போராட்டங்களைத் தாண்டி வர வேண்டியுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள நிலையில், பள்ளி படிப்பு முடிந்த பிறகு மாணவிகளிடம் என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டால், உயர் கல்விக்கு சென்று படிக்கப் போவதாக சொல்கின்றனர். இந்த நிலையை எட்டுவதற்கு, இதற்கு முன் இருந்த தலைமுறைகள் பல தியாகங்களையும், போராட் டங்களையும் செய்துள்ளனர்.
வளர்ந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும், வளர்ந்த சமூகத்தை எடுத்துக்கொண்டாலும், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண் கல்வி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் திராவிட மாடல் ஆட்சியின் முக்கியத்துவமே பெண் கல்வி தான்.
உங்களின் கல்வி கனவு என்னும் பயணத்தில் யாருக்காகவும், எப்போதும் அதை விட்டுவிடாதீர்கள் என்பதை தான் தந்தை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தினார். தந்தை பெரியாரை தாண்டி ஒரு பெண்ணியவாதியை நான் படித்தது இல்லை. அந்த அளவுக்குப் பெண்களுக்காக சிந்திக்கக்கூடி யவர். எல்லா தடைகளையும் உடைத்து ஏறி, அது எதுவாக இருந்தாலும் என்று சொல்லக்கூடிய ஒரு சிந்தனையாளரை, பெண்ணியவாதியை நான் இதுவரைக்கும் பார்த்தது இல்லை. “பெண் ஏன் அடிமையானாள்? “ என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளையில் 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக முதல் முதலாக இருந்த இரும்பு காலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நமது முதலமைச்சர் மிகப் பெருமையாக அறிவித்தார். அந்த பெருமை இருக்கக்கூடிய மாவட்டம், அதே போல் பெருமை இருக்கக்கூடிய இனம் தமிழ் இனம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன்& மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,கல்லூரி தலைவர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், மகாலக்ஷ்மி மகளிர் கல்லூரியின் பேராசிரியர் கே.சுப்புலக்ஷ்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.