fbpx
Homeபிற செய்திகள்நாளை மத்திய பட்ஜெட் -வரிகள் குறைக்கப்படுமா?

நாளை மத்திய பட்ஜெட் -வரிகள் குறைக்கப்படுமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். வழக்கம் போலவே, வரி நிவாரணம் என்பது சாமானிய மக்களுக்கு முதன்மைத் தேவையாக உள்ளது. ஆனால் இந்த முறை அது (வரி குறைப்பு) வெறும் விருப்பம் அல்லது ஆசை மட்டுமல்ல, அது மிகமிக அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட 5 காரணிகள், இந்த பட்ஜெட்டில் கட்டாயம் வரிகளை குறைப்பது குறித்து அரசாங்கத்தை தீவிரமாக பரிசீலிக்க வைத்திருக்கிறது.

நடப்பு 2024-25ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதம் என்ற அளவுக்கே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வளர்ச்சி வேகமாகும். பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 58 சதவீத பங்களிக்கும் தனியார் நுகர்வு குறைந்து வருகிறது. செலவினங்களை குறைப்பதால் நடுத்தர வர்க்க குடும்பங்கள் அழுத்தத்தில் உள்ளன. நகர்ப்புற நுகர்வு பலவீனமாகவே உள்ளது.

குறைந்த வரிகள் மக்களின் கைகளில் பணத்தை விட்டுச்செல்லும், நுகர்வை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும்.
2023-24ம் நிதியாண்டில் தனியார் முதலீடுகள் 9 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் 6.4 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, வணிக நிறுவனங்கள் தங்கள் விரிவாக்க திட்டங்கள் குறித்து எச்சரிக்கையாக உள்ளன.

மேலும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மூலதன வரவை தடுத்து நிறுத்துகிறது. எனவே வரிச் சலுகைகள் மட்டுமே புதிய முதலீடுகளை ஊக்குவிக்க வழிகோலும். குறிப்பாக உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பில், வணிக நம்பிக்கையை உயிர்ப்பிக்க உதவும்.

நாடு முழுவதும் பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள் விலைகள் 26 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து உள்ளதுடன், உணவுப் பணவீக்கம் 8.39 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்தமான பணவீக்கம் குறைந்துள்ளபோதிலும், அத்தியாவசிய செலவுகள் அதிகமாகவே உள்ளது.

எனவே அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் மீதான வரிகளை குறைத்து அல்லது வருமான வரி வரம்புகளை சரிசெய்வதன் மூலம் நடுத்தர வர்க்க குடும்பங்கள் மீதான சுமையை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.

நாட்டில் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதம் அளவுக்குத்தான் உள்ளது என்று அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகின்றன. ஆனால் சில தனியார் மதிப்பீடுகள் அதை 8.2 சதவீதமாக மதிப்பீட்டுள்ளன. அதிக பணியாளர்களை பயன்படுத்தும் துறைகளில் வேலை உருவாக்கம் குறைவாக உள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்கும் குறிப்பாக உற்பத்தி மற்றும் சேவைகள் போன்ற தொழிலாளர் தேவை மிகுந்த தொழில் வணிகங்களுக்கு இலக்கு வரி சலுகைகள் வழங்கினால், கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும்.

கடந்த நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் நம் நாட்டுக்கு 850 கோடி டாலர் அன்னிய முதலீடு வந்தது. ஆனால் இந்த ஆண்டின் அதே காலத்தில் 47.90 கோடி அளவுக்கு மட்டுமே அன்னிய முதலீடு கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும் முதலீட்டை ஈர்க்க கடுமையாக போட்டி கொண்டு இருக்கும் தற்போதைய காலகட்டத்தில், எளிமையான வரி முறை மற்றும் முதலீட்டாளருக்கு ஆதரவான கொள்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டால் மட்டுமே இந்தியாவை உலக மூலதனத்திற்கு ஏற்ற கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் என்பது உறுதி.

இதற்கெல்லாம் நாளைய மத்திய பட்ஜெட்டில் விடை கிடைக்கும். ஒரே ஒரு நாள் பொறுத்திருப்போம்!

படிக்க வேண்டும்

spot_img