சென்னை வடபழனியில் உள்ள பேட்டர்சன் புற்று நோய் மையம் தனது 21-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, சென்னையில் உள்ள பொதுமக்களுக்கு ஒரு மாத இலவச புற்று நோய் பரிசோதனை முகாமை புற்றுநோய் ஒழிப்பு அறக்கட்டளையுடன் இணைந்து நடத்துகிறது.
இந்த முகாம் கடந்த 19-ம் தேதி துவங்கியது. ஜூலை 19-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் குறைந்தபட்சம் 1200 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. முகாமில் நீரிழிவு நோய் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, யூரியா, சீரம் கிரியேட்டின், ரத்த சர்க்கரை அளவு, ஈசிஜி, மார்பு எக்ஸ்-ரே, அல்ட்ராசவுண்ட் மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனையுடன் சிறப்பு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும்.
புற்றுநோய் ஒழிப்பு அறக்கட்டளையின் அறங்காவலர் பி.டி. கோவிந்தராஜன் வரவேற்றார். முகாமை நீதிபதி பி.என். பிரகாஷ் துவக்கி வைத்து பேசினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மூலிகைத் தோட்டத்தைத் திறந்து வைத்து, பல்வேறு கடுமையான நோய்க்கான ஒருங்கிணைந்த சிகிச்சையில் மூலிகைகளின் பயன்பாடு குறித்து பேசினார். அருண் கபிலன், பொது மக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
மூலிகைகளின் பயன்கள்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், ஹோமியோபதி மருந்துகளை பார்வையிட்டு, புற்றுநோய் சிகிச்சையில் மூலிகைகளின் பயன்கள் குறித்து பாராட்டினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.ஏ. சேகர், நடிகர் தாமு, வழக்கறிஞர் சத்யா ராவ், அபர்னதி உள்ளிட்டோர் பேசினர். நோயில் இருந்து குணமடைந்தவர்களும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பேட்டர்சன் புற்றுநோய் மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். விஜயராகவன், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து வந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறித்தும் தெரிவித்தார்.
புற்று நோய் மையம் துவங்கப்பட்ட 2003-ம் ஆண்டு முதல் இதுவரை 16 ஆயிரம் பேர் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அதன் துவக்க நாளில் இந்த புற்று நோய் மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கி ஒரு மாதம் நடத்துகிறது.
முகாமில் யாருக்கேனும் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு இலவச சிகிச்சையும் அளிக்கப்படும்.
பேட்டர்சன் புற்றுநோய் மையம், பி.எஸ்சி. கதிர்வீச்சு தொழில்நுட்பப் படிப்பிற்காக தமிழ்நாடு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ராமன் எபெக்ட் மூலம் ஆராய்ச்சி செய்து 4 மாணவர்களை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது.
இது ஐஐடி சென்னையுடன் இணைந்து அகச்சிவப்பு மற்றும் நியர் இன்ப்ரா-ரெட் மேமோகிராம் பரிசோதனையை மேற்கொள்ள இருக்கிறது.
இதன் மூலம் புற்றுநோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக முழு மக்களுக்கும் 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் செலவில் ஆரம்பகால மார்பக புற்றுநோயை பரிசோதிக்க முடியும்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் புற்று நோய் வராமல் தடுக்க முடியும்.