அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37-வது பட்டமளிப்பு விழா, நேற்று (27ம் தேதி) காலை 11 மணிக்கு தி.சு.அவினாசிலிங்கம் பொது மேடையில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக பத்மஸ்ரீ பேராசிரியர் வி.காமகோடி (இயக்குநர், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் – ஐஐடி சென்னை) பங்கேற்று பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றி தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்குப் பதக்கங்களை வழங்கினார்.

இந்நிறுவனத்தின் வேந்தரும், அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான முனைவர் தி.ச.க.மீனாட்சிசுந்தரம் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கி மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினார்.
அவர் தமது தலைமையுரையில் “பட்டமளிப்பு விழா என்பது ஒருவரின் கல்விப் பயணத்தில் அமையும் ஒரு மிக முக்கியமான மைல்கல். 2047-ஆம் ஆண்டிற்குள் ஒரு ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) எனும் தொலைநோக்கு இலக்கை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், தேசிய மாற்றத்தை முன்னெடுக்கும் மிக வலிமையான கருவிகளில் ஒன்றாகக் கல்வியே தொடர்ந்து திகழும். கல்வி ஒருவருக்கு வலுவான குடிமை உணர்வை வளர்க்கவும், சமூக மேம்பாடு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் பொறுப்பான பங்களிப்பை ஆற்றவும் உதவ வேண்டும்“ என்று எடுத்துரைத்தார்.
விழாவில் துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் கலந்துகொண்டு விழாவிற்கான வரவேற்புரையாற்றி 2025-2026 கல்வி ஆண்டின் அறிக்கையை வாசித்தார். முதன்மை விருந்தினர் பேராசிரியர் வி.காமகோடியைப் பற்றி துணை வேந்தர் குறிப்பிடுகையில், கணினித் தொழில்நுட்பங்களில் இந்தியா தன் னிறைவு அடைவதற்கான பயணத்தில் ஒரு மைல்கல்லாகத் திகழும் “சக்தி” செயலி உருவாக்கத்தில் ஆற்றிய தலைமைப் பங்கினையும். அறிவு, புத்தாக்கம் மற்றும் நிறு வனச் சிறப்பின் வாயிலாக தேசத்தைக் கட்டமைப்பதில் இவர் கொண்டுள்ள ஆழ்ந்த மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப் பையும், தேசிய பாதுகாப்பு ஆலோ சனைக் குழுவிலும், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய பங்குச் சந்தை போன்ற முதன்மை நிறுவனங்களின் முக்கியக் குழுக்களிலும் வகிக்கும் பொறுப்புகளையும் எடுத்துரைத்தார்.

மேலும் அவர் தனது உரையில் “உங்கள் ‘நோக்கத்தையே’ உங்கள் திசைகாட்டியாகக் கொள்ளுங்கள்; ஏனெனில், உங்கள் நோக்கம் தெளிவாக இருக்கும்போது, உங்களுக்கான பாதைகள் தாமாகவே விரியத் தொடங்கும்” என மாணவியருக்கு எடுத்துரைத்தார். பட்டமளிப்பு விழாவின் முதன்மை விருந்தினர் பேராசிரியர் வி.காமகோடி தமது உரையில் ,”1947 ஆம் ஆண்டு இந்திய நாடு சுதந்திரம் பெற்று 2047ம் ஆண்டு நூற்றாண்டினை அடையவிருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விக்சித் பாரத் 2047 ஆண்டின் வளர்ச்சி மாணவர்களுக்கான வளர்ச்சியாக பல்வேறு செயல் திட்டங்களை தேசத்தின் வளர்ச்சி நோக்கி எடுத்துரைத்திருக்கிறார். மாணவர்கள் மூன்று முக்கிய கருத்துக்களை நினைவில் கொள்ள வேண்டும். ஒன்று இந்தியநாடு எதிர்காலத்தில் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் ,மருத்துவம் ஆகியவற்றின் வழியாக மேம்பாடடைய வேண்டும்.
மாணவர்கள்+2 முடித்தவுடன் உயர்கல்விக்கு கற்க வருகிற எண்ணிக்கை இன்றைக்கும் குறைவாகவே இருக்கிறது. நூற்றுக்கு 71 பேர் உயர் கல்வி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய சொந்த கிராமங்களுக்கு சென்று வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள இரண்டு குழந்தைகளை ஒவ்வொருவரும் வழிநடத்தி கல்விக்கான பாதையை எடுத்துரைத்து அவர்களை மேம்படுத்த வேண்டும்.

ஒவ்வொருவரும் இந்த முயற்சியை எடுக்கும் போது அடுத்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் அனைவரையும்கல்வி கற்றவர்களாக உருவாக்க முடியும் .ஒவ்வொரு படிப்பிற்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது . எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்களாகிய உங்களுக்கு நாட்டுப்பற்று இருக்க வேண்டும் .
இன்றைக்கு போர் நடக்கிறது உலகெங்கும் எரிபொருள் , எரிசக்தி ஆற்றல் தட்டுப்பாடுஆகியவை நிலவுகிறது. எனவே நம்முடைய நாட்டிலேயே அனைத்தையும் பெறுகிற தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது என்று எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பதிவாளர் முனைவர் ஹை.இந்து, சிறப்பு விருந்தினர்கள், நிறுவனத்தின் முக்கியத் தலைவர்கள், நிர்வாகக்குழு மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், நிர்வாக அதிகாரிகள், புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பட்டம் பெறும் மாணவியர், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கலந்து கொண்டனர். 37-வது பட்டமளிப்பு விழாவில், கலை மற்றும் சமூக அறிவியல் புலம், மனையியல் புலம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் புலம், வணிகவியல் மற்றும் மேலாண்மை புலம், கல்வியியல் புலம், உயிரியல் அறிவியல் புலம்,பொறியியல் புலம் மற்றும் துணை மருத்துவ அறிவியல் புலம் உள்ளிட்ட பல்வேறு புலங்களைச் சேர்ந்த மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
1682 இளங்கலைப்பட்டதாரிகள், 1 பட்டயதாரர், 532 முதுகலைப்பட்டதாரிகள், 6 முதுகலை பட்டயதாரிகள், 107 முனைவர் பட்டதாரிகள் என 2328 பட்டதாரிகளுக்குப் பல்வேறு துறைகளில் பட்டங்களும் 94 பேர் பதக்கங்களும் பட்டங்களும் வழங்கப்பட்டு மாணவியரின் சாதனைகள் கௌரவிக்கப்பட்டன.



