தமிழகத்தில் மாணவ, மாணவிகள் நவீன செயல்முறையுடன் தொழிற்பயிற்சி பெற, ரூ.2877 கோடி மதிப்பீட்டில் 4.0 தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 4.0 தொழில் மையத்தில் நவீன இயந்திரங்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் செய்முறை பயிற்சி வகுப்புகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த தொழில் மையத்தில் சிஎன்சி இயந்திர தொழில் நுட்பவியலாளர், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு, தன்னியக்குமயம், தொழில் துறை இயந்திரவியல், எண்ணியல் உற்பத்தி ஆகியப் பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், தொழ்ற்பயிற்சி நிலைய பணிமனையில் எலெக்ட்ரீஷியன், ஃபிட்டர், மெக்கானிக்கல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இவற்றை அமைச்சர் சி.வி.கணேசன் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் சுந்தரவள்ளி முன்னிலை வகித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: தொழிற்பயிற்சி மாணவ, மாணவிகள் நவீன காலத்துக்கேற்ப செயல்முறையுடன் கூடிய பயிற்சி பெற்று முன்னணி நிறுவனங்களில் பணி புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.2877 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.0 தொழில் மையங்களை துவக்கியுள்ளார்.
இதனை மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியின்போது, அரசுப் பேருந்து வசதி குறைவாக இருப்பதால், ஆட்டோவில் கூட்ட நெரிசலில் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வருவதாகவும், கூடுதல் பேருந்து வசதி வேண்டும் எனவும் அமைச்சரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, உட னடியாக போக்குவரத்து துறை அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்புகொண்டு மாணவ, மாணவிகள் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்குமாறு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தினார்.
இதையடுத்து ஓரிரு நாள்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். பின்னர், தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கழிப்பறை போன்றவை சுகாதாரமாக உள்ளதா என அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், திறன் மேம்பாட்டுக் கழக கூடுதல் இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் பாபு, தொழில் மேலாண்மை குழுத் தலைவர் ஹரிதாஸ், ஒன்றியக்குழுத் தலைவர் நிர்மலா சௌந்தர், ஆர்டிஓ பாத்திமா, வட்டாட்சியர் சண்முகசுந்தரம், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சித்ரா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.