Homeபிற செய்திகள்போதைப் பழக்கத்தில் சிக்கி விடாமல் மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி விழாவில்...

போதைப் பழக்கத்தில் சிக்கி விடாமல் மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி விழாவில் அண்ணாமலை பேச்சு

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் பேரவை தொடக்க விழா கடந்த 27ம் தேதி காலை 10 மணிக்குக் கல்லூரி வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மாள் பன்னோக்கு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைமைத் தொண்டரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசுகையில், இன்றைய தலைமுறை இளைஞர்கள் வேகமாக மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் இன்று பொறுப்பேற்கும் மாணவர்கள் தலைவர்கள் அல்ல. அவர்கள் கல்லூரியின் மொத்த மாணவர்களின் பிரதிநிதிகள் என்றும் கல்லூரிக் காலத்தில் மாணவர் தலைவர்களாக இருந்த பலர் பின்னாளில் தலைசிறந்த சமுதாயத் தலைவர்களாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டார்
மேலும், இளைஞர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், வேலைவாய்ப்பின்மை, புறக்கணிப்பு உள்ளிட்டவை அவர்களைப் போதைப்பொருள் கலாச்சாரத்தை நோக்கி நகரச் செய்கிறது என்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கு முன்பு மாணவர்களை அப்போதைப் பழக்கத்திற்குத் தூண்டும் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைப் போக்க வேண்டும்“ என்றும் வலியுறுத்தினார்.

இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரி மேலாண்மைக்குழுவின் பொருளாளர் மருத்துவர் ஓ.என். பரமசிவன் முன்னிலை வகித்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் வி.சங்கீதா வரவேற்புரையாற்றினார்.

மாணவர் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாணவத் தலைவர், செயலர், துணைத்தலைவர், இணைச்செயலர் மற்றும் விளையாட்டுத்துறைச் செயலர்கள் ஆகியோருக்கு அவர்தம் பெயரும் பதவியும் பொறித்த வில்லைகளைச் சிறப்பு விருந்தினர் அண்ணாமலை வழங்கினார். போதைப் பொருள் தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடாமை, சூழல் பாதுகாப்பு, தேசப்பற்று ஆகியவற்றை வலியுறுத்தி மாணாக்கர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவின் நிறைவில் மாணவர் பேரவையின் தலைவரும் முதுஅறிவியல் கணிதம் இரண்டாமாண்டு மாணவியுமான பி.சந்தியா நன்றியுரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img