தமிழக சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. திமுக, அதி முக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக-&பாஜக அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என 4 அணிகளாக களம் காண்கின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது.
கூட்டணியை கட்டமைப்பதில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் 23ல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பாமக வென்றிருந்தது.
அதேநேரம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிடம் 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்று அன்பு மணி தரப்பு கேட்டுள்ளது. தற்போது 18 சட்டப் பேரவை தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க முன்வந்துள்ளனர். ஆனால் ராஜ்ய சபா சீட் எப்போது ஒதுக்கப்படும் என்பதில் இழுபறி நீடிக்கிறது.
முன்னதாக, திருச்சி வந்த அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி திட்டமிட்டார். ஆனால் கூட்டணியை இறுதிப்படுத்தாமல் தன்னை சந்திக்கக் கூடாது என்று அமித்ஷா கூறிவிட்டதால், சந்திக்காமல் இருந்தார். தற்போது அன்புமணி பாமக மட்டும் சேர்ந்துள்ளது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் முடிவு எடுப்பதற்காக டெல்லி வரும்படி அமித்ஷா, எடப்பாடியை அவசரமாக அழைத்தார்.
இதனால் நேற்று மதியம் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். இரவு 10 மணிக்கு அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோரை கண்டிப்பாக கூட்டணியில் சேர்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை நீங்கள்தான் எடுக்க வேண்டும் என்று அமித்ஷா கண்டிப்புடன் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், வேறு வழியில்லாமல் அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்காமல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்துச் சொல்வதாக கூறிவிட்டு வந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக, ஓ.பன்னீர் செல்வத்தையும் டிடிவி.தினகரனையும் கட்சியில் சேர்ப்பதற்கான திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளாக்கப்பட்டார்.
தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கூட்டணியில் இணைப்பது குறித்து இறுதி முடிவை எடுத்துவிட வேண்டும் என்ற திட்டத்துடன் தான் அமித் ஷா தமிழகம் வந்தார். தாங்கள் கேட்கும் 80 தொகுதிகளை அதிமுக தங்களிடம் தந்துவிட வேண்டும். அதிலிருந்து கூட்டணி கட்சிகளுக்கு தாங்களே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுப்பது என்பது தான் பாஜக-வின் திட்டம். ஆனால், தோல்வியோடு தான் அமித் ஷா டெல்லி திரும்பினார்.
அவர் சொல்லும்படி டீல் பேசி முடித்தால் பாஜக தான் கூட்டணியையே கட்டமைத்தது போன்ற தோற்றம் உருவாகிவிடும். மற்ற கட்சிகளுக்கு பாஜக தான் தொகுதிகளைப் பகிர்ந்தளிக்கும் என்றால், நாளைக்கு எந்த முடிவாக இருந்தாலும் பாஜக சொல்வதைத்தான் அந்தக் கட்சிகள் கேட்கும் என்பதால் இந்த செயல்திட்டத்துக்கு அதிமுக ஒத்துவருமா என்ற கேள்வியும் எழுகிறது. எடப்பாடி பழனிசாமி அளித்த இன்றைய பேட்டியில் டிடிவி.தினகரனை சேர்த்தாலும் சேர்ப்பேனே தவிர ஓ.பன்னீர்செல்வத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தையும் மீண்டும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் பாஜக, அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஆனால் தனக்கிருக்கும் சில சங்கடங்கள் காரணமாக, அதற்கு பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால், பலமான அதிமுக – பாஜக கூட்டணியை கட்டமைப்பது இன்னும் இழுத்துக் கொண்டே போகிறது.
அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ள இந்த சூழலில், இரண்டு கட்சிகளும் இதற்கு மேலும் ஒருமுடிவுக்கு வராவிட்டால் அதன் பிறகு, யார் நினைத்தாலும் யாரையும் இழுத்து நிறுத்த முடியாமல் போய் விடக்கூடும்!



